| ADDED : ஜூன் 14, 2024 12:24 AM
கோவை : 'கோவை மாவட்டத்தில் உள்ள அரசுத்துறைகளில் பணியின் போது மரணமடைந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு ஓராண்டாக கருணை அடிப்படையிலான பணிவழங்காமல் காலதாமதம் செய்யப்படுகிறது.கோவை மாவட்டத்தில் 2 ஊராட்சித்துறை பணியாளர்கள் பணிகாலத்தில், மாரடைப்பு மற்றும் விபத்து ஏற்பட்டு இளம் வயதிலேயே மரணம் அடைந்தனர். கடந்த ஓராண்டாகியும் அந்த பணியாளரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பணி வழங்கவில்லை. அவர்களது வாரிசுகள் கடந்த ஓராண்டாக அதிகாரிகள் கேட்கும் ஆவணங்களை கொடுத்தும் எந்த பலனுமில்லை. வெவ்வேறு சான்றுகளை மாற்றி மாற்றி கேட்டு அலைகழிக்கின்றனரே தவிர பணி நியமனம் செய்ய யோசிக்கின்றனர்.இது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் செந்தில்குமார் கூறியதாவது: அரசுப்பணியில் இருக்கும் குடும்பத்தலைவரை இழந்து வாடும் குடும்ப வாரிசுகளுக்கு பணி வழங்காமல் பல காரணங்களை சொல்லி இழுத்தடிப்பது சக அரசு ஊழியர்கள் அல்ல. அரசின் கொள்கை.கருணை அடிப்படையிலான பணி முன்பு, 25 சதவீதமாக இருந்தது. தற்போது, 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்காக தனி அரசாணை, 53 வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அதிலும் பல மாற்றங்களை கொண்டுவரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.இது குறித்து கலெக்டர் அலுவலக அதிகாரிகள் கூறுகையில், ''கருணை அடிப்படையிலான பணி வழங்குவது குறித்து அரசு ஏற்படுத்திக்கொடுத்துள்ள வழிகாட்டி நெறிமுறைகளை சரியாக பின்பற்றி வருகிறோம். அதற்கேற்ப சம்மந்தப்பட்ட துறையில் பணியிடம் காலியாகும் போது தான் நிரப்ப முடியும்,'' என்றனர்.