கியர் பாக்ஸ் பழுது நீக்கப்படாமல் இயக்கிய பஸ்சில் திக்திக் பயணம்
பொள்ளாச்சி: 'கியர் பாக்ஸ்-' பழுது நீக்கம் செய்யப்படாமல் நேற்று, இயக்கப்பட்ட அரசு பஸ்சில் பயணித்த மக்கள் பாதிப்படைந்தனர்.பொள்ளாச்சி பழைய மற்றும் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து, அதிகப்படியான அரசு 'மப்சல்' மற்றும் டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் பஸ்களில், ஏதேனும் பழுது ஏற்பட்டு, சீரமைக்க முற்பட்டால், 'ஸ்பேர் பஸ்' இயக்கப்படும்.அவ்வகையில், பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு டி.என்.38 என் 3430 எண் கொண்ட பஸ் இயக்கப்பட்ட நிலையில், 'கியர் பாக்ஸ்' பழுது காரணமாக பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.தற்போது, பழுது நீக்கம் செய்யப்படாமல், டவுன் பஸ்க்கு மாற்றாக இயக்கப்படுகிறது. நேற்று, அந்த பஸ் 12ஏ/29 வழித்தடத்தில் இயக்கப்பட்டது. கியரை இயக்க முடியாமல் டிரைவர் திணறியதால், பஸ்சில் பயணித்த மக்கள் அதிருப்தி அடைந்தனர்.மக்கள் கூறியதாவது:புது பஸ் ஸ்டாண்டில் இருந்து, செம்மாணம்பதி, பொங்காளியூர் வழித்தடத்தில் இந்த பஸ் இயக்கப்பட்டது. டிரைவர் பஸ்ஸை ஸ்டார்ட் செய்த போது, 'கியர்' விழாமல் மக்கர் செய்தது. ஏற்கனவே 'கியர் ராடில்' துணி கட்டி வைக்கப்பட்டிருந்ததால் டிரைவர் செய்வதறியாது திணறினார்.'கியர் பாக்ஸ்' பழுது சரி செய்யப்படாத நிலையில், வழித்தடத்தில் பஸ் இயக்கப்பட்டது. பஸ்சில் பயணித்தவர்களுக்கு, குறித்த நேரத்தில், அவரவரின் ஊரைச் சென்றடைய முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. மக்களை பாதுகாப்புடன் ஏற்றிச் செல்ல பழுது இல்லாத பஸ்களை இயக்க வேண்டும். அரசு போக்குவரத்து கழக உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.