மேலும் செய்திகள்
கர்ப்பப்பை கட்டியா? கவலை வேண்டாம்!
09-Aug-2024
கடந்த காலங்களில் இல்லாத அளவில், கர்ப்பப்பை சார்ந்த பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, 20 வயது பெண்கள் முதல் மாதவிடாய் பிரச்னையை அதிகம் எதிர்கொள்கின்றனர். குழந்தை பேறு சிக்கல்களுக்காக சிகிச்சை பெறுபவர்களில், பெரும்பாலானவர்களுக்கு பைப்ராய்டு என்னும் கர்ப்பப்பை தசைநார்க்கட்டி பாதிப்பு இருப்பது தெரியவருகிறது.20 முதல் 70 வயது வரையிலான பெண்கள் இதனால் அவஸ்தைப்படுகின்றனர். பலருக்கு இதனால், கர்ப்பப்பை நீக்கும் அளவிற்கு பிரச்னைகள் பெரிதாகி விடுகிறது. இது குறித்து, ஹோமியோபதி, ஆயுர்வேதம் மற்றும் அலோபதி டாக்டர்கள் மூவரிடமும் கேட்டோம்.ஹோமியோபதி முதுநிலை மருத்துவர் தாமரைச்செல்வன்உணவு முறையே பைப்ராய்டு கட்டிகளுக்கு முக்கிய காரணம். மன அழுத்தம், சர்க்கரை, தைராய்டு போன்ற பிற நோய்கள், மரபு ரீதியான பிரச்னைகளும் காரணம். நாம் சேர்க்கும் உப்பு முதல் பால், எண்ணெய் வரை அனைத்திலும் பிரச்னைகள் உள்ளன. இதை தவிர, பாஸ்ட் புட், பேக்கரி உணவுகள், புரோட்டா என, நாமே மேலும் பாதிப்பை ஏற்படுத்திக்கொள்கிறோம். மாதவிடாய் பிரச்னைகள் ஆரம்பத்தில் துவங்கும் போதே, கவனம் செலுத்த வேண்டும். அதை பலர் கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர். தவிர, மாதவிடாய் நாட்கள் தள்ளிப்போகவும், முன்கூட்டியே ஆகவும், மருந்து வேறு எடுத்துக்கொள்கின்றனர். உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, நல்ல மனநிலை இதில் முக்கியம். இக்கட்டி கேன்சர் கட்டியாக மாறாது என்பதால், பயம் தேவையில்லை. ஹோமியோபதியில் மருந்துகளை கொண்டே சரிசெய்து விடலாம். கர்ப்பப்பை நீக்கவேண்டிய தேவையில்லை. அதிக ரத்தப்போக்கு காணப்பட்டால் தவிர, பெரிதாக பயப்பட வேண்டியதில்லை; ஆனால், உரிய சிகிச்சை முன்கூட்டியே எடுத்துக் கொள்ள வேண்டும். மகப்பேறு மருத்துவமனை டாக்டர் அவந்தி கிருபாசங்கர்பொதுவாக, 40-50 வயதுடைய பெண்களுக்கு பைப்ராய்டு கட்டிகள் என்பது பொதுவான பிரச்னையாக உள்ளது. மரபு சார்ந்தும், ஹார்மோன், சிறிய வயதில் பூப்பெய்தல் , சரியான நேரத்தில் மெனோபாஸ் வராமல் இருத்தல், மன அழுத்தம், உடல் பருமன், உடற்பயிற்சியின்மை, குழந்தையின்மை, சுற்றுச்சூழல், போன்ற பல காரணங்கள் இதற்கு உண்டு. பலருக்கு இப்பிரச்னை இருப்பதே தெரியாது. சிலருக்கு, மாதவிடாய் காலத்தில் அதிக வலி, அதிக ரத்த போக்கு, மாதவிடாய் கால அளவு மாறுபாடு, கீழ் முதுகு வலி, வயிறு பெரிதாகுதல், வயிற்றில் ஒரு வித அழுத்தம், கட்டிகள் கர்ப்பப்பை முன் இருப்பின், யூரின் சார்ந்த பிரச்னைகள், பின் இருப்பின் மலச்சிக்கல், உடலுறவின் போது அதிக வலி மற்றும் ரத்தம் வெளியேறுதல் போன்றவை இதற்கு அறிகுறியாக இருக்கலாம். இதுபோன்ற தொந்தரவுகள் தொடர்ந்தால், கட்டாயம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இக்கட்டி, கேன்சர் கட்டியாக மாறுவதற்கு, 0.1 முதல் 0.3 சதவீதம் மிக அரிதாக வாய்ப்புள்ளது. கேன்சர் கட்டிகளாக இருப்பின், அதன் வளர்ச்சி மிக வேகமாக இருக்கும். கர்ப்பப்பை அனைவருக்கும் எடுக்க வேண்டுமா என்றால், நிச்சயம் தேவையில்லை.கர்ப்பப்பை உள்ளே உள்ள கட்டிகளை மட்டும் நீக்கினால் போதும். வெளியில் உள்ள கட்டிகள் 5 செ.மீ., க்கு குறைவாக இருந்தால் மருந்துகள் மட்டுமே போதும். அதிக எண்ணிக்கையில் கட்டி இருப்பவர்கள், அக்கட்டி 10 முதல் 15 செ.மீ., இருப்பவர்கள் மிகவும் உடல் ரீதியாக அனீமிக்காக இருப்பவர்களுக்கு மட்டுமே, கர்ப்பப்பை நீக்க பரிந்துரைக்கப்படும். இப்பிரச்னைக்கு நவீன சிகிச்சை முறைகள் உள்ளதால் அச்சப்படத் தேவைஇல்லை. உணவு பழக்கவழக்கத்தை முறையாக வைத்துக்கொள்ள வேண்டும். அதிக சத்து நிறைந்த காய்கறி, பழங்கள், கீரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு அதிக சர்க்கரை சார்ந்த உணவுகளை கொடுப்பதை தவிர்க்க வேண்டும் அதுவே, பல நோய்களுக்கு அடித்தளமாக மாறிவிடுகிறது.
ஆரிய வைத்திய சிகிச்சாலய உதவி தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் விஜய பிரியா கூறியதாவது:பொதுவாக பைப்ராய்டு கட்டிகள், கர்ப்பப்பை உள்ளே, வெளியே, நடுவே வரும். இதற்கு, மருந்துகள் , ஜீரண மண்டலத்தை சரிசெய்தல், வயிற்றை சுத்தம் செய்து கழிவுகளை அகற்றுதல் உணவு பழக்கவழக்கம், உடற்பயிற்சி போன்றவை வாயிலாக சிகிச்சை அளிக்கப்படும்.இளம் வயதினர், குழந்தை பேருக்கு முயற்சி செய்பவர்களாக இருந்தால் கட்டியை அகற்ற பரிந்துரைப்போம். பிறருக்கு மருந்துகள் வாயிலாக சரிசெய்துகொள்ளலாம்.கர்ப்பப்பை நீக்கம் என்பது பெரும்பாலும் அவசியம் இல்லை; அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு இதனால், அவர்களின் அன்றாட செயல்பாடுகள் முற்றிலும் பாதிக்கப்படும் நிலையில், மருந்துகள் கொடுத்து சரிசெய்யும் அவகாசம் இல்லாத சூழலில், கர்ப்பப்பை நீக்குவதற்கு பரிந்துரை செய்வோம்.மேனோபாஸ் காலத்துக்கு பின் கர்ப்பப்பை சுருங்கும் போது, கட்டிகளும் சுருங்கிவிடும். ஆகையால் சிக்கல்கள் இருக்காது.இவ்வாறு, அவர் கூறினார்.
09-Aug-2024