தொண்டாமுத்தூர் : கலிக்கநாயக்கன்பாளையத்தில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில், 381 பயனாளிகளுக்கு, 4.30 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, கலெக்டர் கிராந்திகுமார் வழங்கினார்.பேரூர் தாலுகாவிற்கு உட்பட்ட, கலிக்கநாயக்கன்பாளையம் கிராமத்தில், மக்கள் தொடர்பு முகாம் நேற்று நடந்தது. இம்முகாமிற்கு கலெக்டர் கிராந்திகுமார் தலைமை வகித்தார். இம்முகாமில், வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, குழந்தைகள் நல பாதுகாப்பு துறை, சுகாதாரத்துறை, வங்கிகள், தாட்கோ உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு, அரசின் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தாட்கோ, மாவட்ட முன்னோடி வங்கி, சாலை விபத்து நிவாரண தொகை, நத்தம் பட்டா மாறுதல் என, 381 பயனாளிகளுக்கு, 4.30 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கிராந்திகுமார் வழங்கினார்.இம்முகாமில் கலெக்டர் கிராந்திகுமார் பேசுகையில், இயற்கை எழில் சூழ்ந்த அழகான இப்பகுதியை காப்பாற்ற வேண்டுமானால், மாசு படுத்தாமல் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு பிளாஸ்டிக் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். பேரூராட்சி பகுதிகளில் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து, வீடுகளில் இருந்து சேகரித்து திடக்கழிவு மேலாண்மை பணியினை திறம்பட மேற்கொள்ள வேண்டும். வரும் காலத்தில் இங்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதற்கு மாசு இல்லாமல் இப்பகுதியின் இயற்கை எழில் பாதுகாக்க வேண்டும், என்றார்.