மேம்பாலத்தில் ஓட்டுநர்கள் அலட்சியம்; விழிப்புணர்வு அறிவிப்பு அவசியம்
பொள்ளாச்சி; பொள்ளாச்சி, கோட்டூர் ரோடு ரயில்வே மேம்பாலம், குறுகலாக இருக்கும் நிலையில், முந்திச் செல்ல முற்படும் வாகனங்களால் விபத்து அபாயம் அதிகரிக்கிறது.பொள்ளாச்சி, கோட்டூர் ரோடு பஸ் ஸ்டாப் அருகே, ரயில்வே மேம்பாலம் சுற்றுப்பகுதி கிராமங்களை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ளது. கிராம மக்கள் மட்டுமின்றி, வால்பாறை, ஆழியாறு உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சென்றும் திரும்பும் சுற்றுலாப் பயணியரும், இந்த மேம்பாலத்தையே பயன்படுத்துகின்றனர்.குறுகலான ரயில்வே மேம்பாலத்தில், எப்போதும் வாகன போக்குவரத்து அதிகளவில் காணப்படுகிறது. அவ்வாறு இருந்தும், சில வாகன ஓட்டுநர்கள், ரயில்வே மேம்பாலத்தில் வாகனத்தை இயக்கும்போது, பிற வாகனங்களை முந்தி செல்ல முற்படுகின்றனர். இதனால், அவ்வப்போது விபத்தும் ஏற்படுகிறது.இரண்டு சக்கர வாகனத்தில் பயணிப்போர், நிலை தடுமாறி கிழே விழுகின்றனர். எனவே, மேம்பாலத்தை ஒட்டிய பகுதிகளில் விழிப்புணர்வு அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.தன்னார்வலர்கள் கூறியதாவது:அகலமான ஓடுதளமுள்ள மேம்பாலமாக இருந்தால், எதிரே வரும் வாகனத்தின் துாரம், வேகம், இடம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு முந்தி செல்லலாம். அப்போது, வாகனத்தை முந்தி சென்ற பின், லேனிற்கு திரும்புவதற்கு முன், அந்த வாகனத்தை முழுவதுமாக தாண்டி விட்டோமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.ஆனால், அகலம் குறைந்த இந்த மேம்பாலத்தில், வாகனங்கள் முந்திச் செல்ல முற்பட்டால், விபத்து அபாயம் ஏற்படுகிறது.ரயில்வே மேம்பாலம், குறைந்த துாரமே உள்ளதால், வாகன ஓட்டுநர்கள், பொறுமையாக செல்ல வேண்டும். எனவே, வாகன ஓட்டுநர்கள் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.