கிணத்துக்கடவு;பொள்ளாச்சி - கோவை ரோட்டில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில், பொள்ளாச்சி, ஆச்சிபட்டி முதல் ஈச்சனாரி வரை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டது.இதில், நகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் மற்றும் ரயில்வே பாதையை தவிர்க்க, முள்ளுப்பாடி, கிணத்துக்கடவு, ஒத்தக்கால்மண்டபம், ஈச்சனாரி போன்ற இடங்களில் மேம்பாலம் கட்டப்பட்டது.இந்த ரோட்டில் வாகனங்கள் ஆயிரக்கணக்கில் அதிவேகமாக பயணிப்பதால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதை தவிர்க்க, கிணத்துக்கடவு, ஆர்.எஸ்., ரோட்டில் இருந்து சொலவம்பாளையம், மயிலேரிபாளையம், மலுமிச்சம்பட்டி, கற்பகம் பைபாஸ் வரை உள்ள ரோட்டை அகலப்படுத்த வேண்டும்.இந்த ரோடு செயல்பாட்டிற்கு வந்தால், கிணத்துக்கடவுக்கு கிழக்கு பகுதியில் உள்ள கிராம மக்கள், பொள்ளாச்சி - கோவை ரோட்டிற்கு செல்லாமல் இந்த ரோட்டின் வழியாக, கிணத்துக்கடவில் இருந்து 'எல் அண்டு டி' பைபாஸ் ரோட்டையும், மற்றும் வெள்ளலூர் வழியாக சிங்காநல்லூர் மற்றும் ஏர்போர்ட் போன்ற இடங்களுக்கு செல்ல முடியும்.இந்த வழித்தடத்தில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, அப்பகுதியில் வர்த்தக நிறுவனங்கள், கடைகள் அதிகமாகும். இதனால், சிறு வியாபாரிகள் பயன்பெற வாய்ப்புள்ளது.இந்த மாற்றுப்பாதை செயல்பாட்டிற்கு வந்தால், பொள்ளாச்சி - கோவை ரோட்டில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை குறைவதோடு, விபத்து நடப்பதையும் தவிர்க்க அதிக வாய்ப்புள்ளது. இதே போன்று, கிணத்துக்கடவு முதல் காட்டம்பட்டி வரை உள்ள ரோட்டிலும் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக, கனரக வாகனங்கள் பயணிப்பது அதிகரித்துள்ளதால், இந்த ரோட்டையும் அகலப்படுத்த வேண்டும்.எனவே, மக்கள் நலன் கருதி இந்த இரண்டு வழித்தடத்தையும் அகலப்படுத்தி மேம்படுத்தினால், விபத்து எண்ணிக்கை குறையும். குறித்த நேரத்துக்கு எளிதாக செல்ல முடியும், என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.