பொள்ளாச்சி:பொள்ளாச்சி அங்கன்வாடி மையங்களில், மழலையர் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது என, வடக்கு ஒன்றிய குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வீணா தெரிவித்தார்.அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள், பள்ளிக்கு செல்லும் வகையில், மனதளவில் தயார் படுத்துவதற்காக, முன்பருவக் கல்வி அளிக்கப்படுகிறது.இதன் வாயிலாக, இரண்டு முதல், ஐந்து வயது வரை உள்ள குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்.அதன்படி, தற்போது, பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் உள்ள, 106 அங்கன்வாடி மையங்களில், 1,775 குழந்தைகள், தெற்கு ஒன்றியத்தில் உள்ள, 99 அங்கன்வாடி மைங்களில், 1,750 குழந்தைகளும் முன்பருவ கல்வி பயின்று வருகின்றனர்.பள்ளியைப்போல், அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கும் 15 நாட்கள் கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், நேற்றுமுதல் அங்கன்வாடிகள் செயல்படத் துவங்கிய நிலையில், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ஆர்வமுடன் மையங்களுக்கு அழைத்து வந்தனர்.இந்த மையங்களில் மழலையர் வகுப்புக்கான மாணவர்கள் சேர்க்கையும் தற்போது நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை அங்கன்வாடி பணியாளர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர். மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க, அங்கன்வாடி மையங்களை அழகுபடுத்தி வருகின்றனர்.பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வீணா கூறியதாவது:குழந்தைகள் அறிவுத்திறன் வளர்ச்சியடைய அங்கன்வாடி மையங்களில், 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி கற்பிக்கப்படுகிறது. குழந்தைகளின் அறிவாற்றலை துாண்டும் வகையில், கதை, பாட்டு, விளையாட்டு வாயிலாக கல்வி கற்பிக்கப்படுகிறது.கல்வி பயிலும் குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்கப்படுகிறது. ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ள குழந்தைகளை கண்டறிந்து, அதற்கு ஏற்ப அவர்களுக்கு சத்தான உணவு வழங்கப்படுகிறது.குழந்தை அல்லது பெற்றோர்களின் ஆதார் கொண்டு, மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இவர்களுக்கு இலவசமாக சீருடை மற்றும் புத்தகங்கள் வழங்கப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.