- நிருபர் குழு -பொள்ளாச்சி அருகே, ஏரிப்பட்டி பள்ளி ஆசிரியர், வீடு, வீடாகச் சென்று, மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் கீதா, ஏரிப்பட்டி சுற்றுப்பகுதி கிராமங்களில், வீடு, வீடாகச் சென்று பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.பயன் தரும் மரங்களான சிறு நெல்லி, பெரு நெல்லி, மாதுளை, எலுமிச்சை, கொய்யா என, 50 மரக்கன்றுகளை வழங்கினார்.பொள்ளாச்சி கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஞானசேகரன், பிச்சனுார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர், மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினர். பள்ளி தலைமையாசிரியர் சுகந்தி, வில்வம் மரக்கன்றுகளை கோவிலில் நடவு செய்தார்.ஏரிப்பட்டி பள்ளி சுற்றுச்சூழல் மன்ற ஆசிரியர் கீதா கூறியதாவது: கடந்த ஐந்து ஆண்டுகளாக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மாணவர்கள், பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. அதே போல, இந்தாண்டும் வீடு, வீடாக அனைவரையும் தேடிச்சென்று மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.மரக்கன்றுகளை வளர்த்து அதன் வாயிலாக கிடைக்கும் பழங்கள், காய்களை பள்ளியில் ஆசிரியரிடம் வழங்கினால் பரிசு கிடைக்கும் என அறிவுறுத்தப்பட்டது. இதேபோன்று கடந்தாண்டு கொடுத்த பழ மரக்கன்றுகளை மாணவர்கள் நல்ல முறையில் வளர்த்தியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.கடந்த, ஐந்தாண்டுகளாக வழங்கப்பட்ட மரக்கன்றுகளை, மாணவர்கள் வீடுகளில் சிறப்பாக வளர்த்து வருவதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு, அவர் கூறினார்.தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், ''சுற்றுச்சூழலின் தாக்கத்தை குறைக்கும் பொருட்டு மரங்களை வளர்த்தால், வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம். பறவைகள், விலங்குகளுக்கு உறைவிடமாகவும், உணவுச்சங்கிலி பாதிக்கப்படாமல் சமநிலை காக்கப்படும்,'' என்றார். உடுமலை
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மடத்துக்குளம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில், மடத்துக்குளம், உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.மடத்துக்குளம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர், விஜயகுமார் தலைமை வகித்தார். அரசு வக்கீல் மனோகரன், மடத்துக்குளம் வக்கீல்கள் சங்க தலைவர் சிவகுரு, வக்கீல்கள் பஷீர் அஹமத், சிவகுமார், பாலகோபால், வீரபாபு மற்றும் நீதிமன்ற அலுவலர்கள் பங்கேற்றனர்.* உடுமலை பிரம்மகுமாரிகள் அமைப்பின் சார்பில், ராஜயோக தியான நிலையத்தில் 'யோக வீட்டு தோட்ட திட்டம்' துவக்கப்பட்டது. தியான நிலைய பயிற்சி ஆசிரியர் மீனா யோகமுறை விவசாயத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் பயன்கள் குறித்து விளக்கமளித்தார். நிகழ்ச்சியில் விவசாயிகள், பெண்கள் பங்கேற்று காய்கறிசெடிகள், பூச்செடிகளை நட்டனர்.