கோவை:தென்னை மரங்களைக் காப்பாற்ற தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றும் விவசாயிகளை, அதிகாரிகள் தடுக்கக்கூடாது என, முன்னாள் அமைச்சர் வேலுமணி வலியுறுத்திஉள்ளார்.முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையிலான எம்.எல்.ஏ.,க்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டரிடம் அளித்தனர். தொடர்ந்து, வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:மாவட்டம் முழுதும் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.பருவமழைக்கு முன்பாக, சிறுவாணி, பில்லூர் உள்ளிட்ட அணைகள், குளங்கள், நீர்த்தேக்கங்களைத் தூர்வார வேண்டும்.கடைக்கோடி கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. இதர பகுதிகளிலும் 15- முதல் 20 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. சீரான குடிநீர் வினியோகத்துக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.அத்திக்கடவு - அவிநாசி திட்டம், கம்பாலபட்டி கூட்டுக்குடிநீர் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.குடியிருப்பு பகுதிக்குள்வனவிலங்குகள் வருவதைத் தடுக்க வேண்டும். உள்ளாட்சிகளில் தினசரி குப்பை அள்ளுவதை முறைப்படுத்த வேண்டும்தொண்டாமுத்தூர், இக்கரைப் போளுவாம்பட்டி ஊராட்சியில், ஊர்நத்தம் ஜீரோ வேல்யூ ஆக மாறியிருப்பதால், சொத்துகளை விற்கவோ வாங்கவோ முடிவதில்லை.இதை மாற்ற வேண்டும். மோசமான சாலைகளை தரமாக சீரமைக்க வேண்டும், என வலியுறுத்தி, கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பகுதியில் மழை இல்லாமல் தென்னை மரங்கள் காயும் நிலையில் உள்ளன. மரங்களைக் காப்பாற்ற விவசாயிகள் டேங்கர்களில் விலைக்கு வாங்கி தண்ணீர் ஊற்றி வருகின்றனர். இதை சில அதிகாரிகள் தடுக்கின்றனர். அதைத் தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, வேலுமணி தெரிவித்தார்.அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் ஜெயராமன், அமுல் கந்தசாமி, அம்மன் அர்ச்சுனன், அருண்குமார், செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.