உடுமலை : பொள்ளாச்சி முதல் திண்டுக்கல் வரையிலான விரைவு சாலை திட்ட பணிகள் 'ஆமை' வேகத்தில் நடப்பதால், போக்குவரத்து பாதிப்பு, விபத்துக்கள் என பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது.மத்திய அரசின், 'பாரத் மாலா பிரயோஜனா' திட்டத்தின் கீழ், பொள்ளாச்சி முதல்,-- திண்டுக்கல் கமலாபுரம் வரை, 3,649 கோடி ரூபாய் செலவில் விரைவுச்சாலை அமைக்கும் பணி துவங்கியது.பொள்ளாச்சியிலிருந்து- மடத்துக்குளம் வரை, 50.07 கி.மீ.,; மடத்துக்குளம் - - ஒட்டன்சத்திரம், 45.38 கி.மீ.,; ஒட்டன்சத்திரம் - முதல் கமலாபுரம் வரை, 36.51 கி.மீ., என, 131.96 கி.மீ., சாலை அமைக்கவும், இதில், 106.693 கி.மீ., (80 சதவீதம்) புறவழிச்சாலையாக அமையும் வகையில் திட்ட வடிவமைக்கப்பட்டது.இத்திட்டத்தின் கீழ், மடத்துக்குளம் முதல் திண்டுக்கல், கமலாபுரம் வரை பெரும்பாலான பணிகள் நிறைவு பெற்று, போக்குவரத்தும் அனுமதிக்கப்பட்டுள்ளது. சுங்க கட்டணமும் இப்பகுதியில் வசூலிக்கப்பட்டு வருகிறது.ஆனால், பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளில், பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது. அதிலும், உடுமலை, தாராபுரம் ரோடு, திருப்பூர் ரோடு, பெதப்பம்பட்டி ரோட்டை கடக்கும் வகையில் கட்டப்பட வேண்டிய மேம்பாலங்கள் இழுபறியாகி வருகிறது.திண்டுக்கல் வழியாக வரும் வாகனங்கள் திடீர் ரோடு, முடிவடைவதால், மடத்துக்குளம் பகுதியில் விபத்துக்கள் அதிகரிப்பதோடு, தற்போதுள்ள தேசிய நெடுஞ்சாலைக்கு மீண்டும் வாகனங்கள் வருவதால், போக்குவரத்து நெரிசலும், விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.மேலும், திட்ட காலம் முடிந்தும், பணிகள் இழுபறியாகி வருவதால், பிரதான ரோடுகள் மற்றும் கிராம இணைப்பு சாலைகள் அமைந்துள்ள பகுதிகளில், ரோடுகள் குண்டும், குழியுமாக மாறி, போக்குவரத்து பாதித்து வருகிறது.விவசாய நிலங்களுக்கு மத்தியில் விரைவுச்சாலை அமைக்கப்பட்டு வரும் நிலையில், கிராமங்களும், விவசாய நிலங்களும் துண்டிக்கப்பட்டுள்ளது.இதனால், இந்த ரோட்டை கடக்க முடியாமலும், உரிய இணைப்பு ரோடு பணி முடியாமலும், பல ஆண்டுகளாக விவசாயிகள் பாதித்து வருகின்றனர்.விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாமலும், இடு பொருட்கள், விளைபொருட்களை வெளியில் கொண்டு வர முடியாமலும் பெரும் சிக்கல் ஏற்படுகிறது.எனவே, பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளிலும், நான்கு வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.