பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில், கொய்யா கன்றுகளை அடர் நடவு முறையில் கவாத்து செய்து, மகசூல் அதிகரிக்கச் செய்ய விவசாயிகள் சிலர் ஆர்வம் காட்டுகின்றனர்.மழைக்காலமான ஜூன், ஜூலை மாதங்கள், கொய்யா நடவுக்கு ஏற்ற பருவம் என்பதால் விவசாயிகள் பலரும், வடிகால் வசதியுள்ள அனைத்து மண் வகைகளிலும் கொய்யா நடவுப்பணியை மேற்கொள்கின்றனர்.அவ்வகையில், பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களைச்சேர்ந்த விவசாயிகள் சிலர், அடர் நடவு முறையில் கொய்யா சாகுபடி செய்ய முற்பட்டுள்ளனர்.அதாவது, 3 மீ., இடைவெளியில் கொய்யா கன்றுகளை நட்டு பராமரிப்பு செய்கின்றனர். இதனால் இரட்டிப்பு அளவு மகசூல் கிடைக்கும் என, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.விவசாயிகள் கூறியதாவது:குறைந்த நீரில், வறட்சியைத்தாங்கி வளரும் கொய்யாவுக்கு, சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது. இதனால், விவசாயிகள் சிலர், கொய்யா சாகுபடியில் ஆர்வம் காட்டுகின்றனர்.நல்ல மண் பாங்கான இடம், சீரான தட்பவெப்பநிலை உள்ள பகுதியில் சாகுபடி செய்யப்படும் கொய்யா, மிகுந்த சுவையுடன் இருக்கும். கொய்யாவுக்கு அதிக பராமரிப்பு தேவையில்லை.குறிப்பிட்ட அளவுக்கு மேல் செடிகளை உயரவிடாமல், ஆண்டுக்கு, 2 முறை கவாத்து செய்தால் போதும். நடவு செய்து, 5 மாதங்கள் கழித்து பூக்கத் தொடங்கும் போது பூக்களை உதிர்த்துவிட வேண்டும்.பூக்களை உதிர்ப்பதுடன், கவாத்தையும் முறையாகச் செய்தால்தான் மரங்கள் பருமனாக, தரத்துடன், பலமாக இருக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.