கோவை;தவறான அறுவை சிகிச்சையால் கண்பார்வை இழந்தவருக்கு, ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, தனியார் மருத்துவமனைக்கு உத்தரவிடப்பட்டது. கோவை, பி.என்.புதுார், கோகுலம் காலனியை சேர்ந்தவர் தங்கவேல். இவரது கண்களில் பார்வை குறைபாடு ஏற்பட்டதால், கோவை, மேட்டுப்பாளையம் ரோட்டிலுள்ள டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையில் பரிசோதனை செய்தார். அறுவை சிகிச்சை செய்தால், கண் பார்வை சரியாகி விடும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன்படி, 2021, மார்ச், 9ல் வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்காக, 30 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தினார். அதன்பிறகும் பார்வை தெரியவில்லை. மீண்டும் பரிசோதித்த மருத்துவர்கள், இடது கண்ணிலும்அறுவை சிகிச்சை செய்தனர். இதற்கும், 30 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி, அறுவை சிகிச்சை செய்தும், கண் பார்வை தெரியவில்லை. இதனால், அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தபோது, இனிமேல், 100 சதவீதம் கண்பார்வை வராது என, மருத்துவர்கள் தெரிவித்தனர். தனியார் மருத்துவர் கவனம் இல்லாமல், தவறாக ஆபரேஷன் செய்ததால், கண் மற்றும் மூளையை இணைக்கும் நரம்பு சேதம் அடைந்து பார்வை இழப்பு ஏற்பட்டது , பரிசோதனையில் தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த தங்கவேல், இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவு: மருத்துவர்கள் கவனம் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்து, பார்வை இழப்பு ஏற்படுத்தியதால், மனுதாரருக்கு ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அறுவை சிகிச்சைக்கு பெற்ற கட்டணம், 53 ஆயிரத்து 987 ரூபாய் திருப்பிச் செலுத்த வேண்டும். வழக்கு செலவு 5,000 ரூபாய் வழங்க வேண்டும். இவ்வாறு, உத்தரவில் தெரிவித்துள்ளனர்.