உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெண்களுக்கான இலவச பயிற்சி ஆர்வமுள்ளோர் பங்கேற்கலாம்

பெண்களுக்கான இலவச பயிற்சி ஆர்வமுள்ளோர் பங்கேற்கலாம்

கோவை;இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் (இ.டி.ஐ.ஐ.,), கோவை மாவட்டத்தில் பெண்களுக்கு இலவச தொழில்முனைவோர் பயிற்சி அளிக்கவுள்ளது.இதுதொடர்பாக, அகமதாபாத், இ.டி.ஐ.ஐ., திட்ட மேலாளர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை:மத்திய அரசின் தேசிய வள அமைப்பான, இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், கோவை மாவட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, ஒரு மாத தொழில்முனைவோர் பயிற்சியுடன் கூடிய திறன் பயிற்சியை இலவசமாக வழங்குகிறது.இத்திட்டத்தில் பயன்பெற, 18 முதல் 45 வயது வரையிலான பெண்கள் விண்ணப்பிக்கலாம். தொழில்முனைவோர் பயிற்சியுடன், திறன் பயிற்சியான கைவினைப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி, கோவை, ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள, நிர்மலா கல்லூரி ரிதம் வளாகத்தில் அளிக்கப்பட உள்ளது. வாழை நாரில் இருந்து பல்வேறு பொருட்கள் தயாரித்தல் குறித்த பயிற்சி, காரமடையில் வழங்கப்பட உள்ளது. தேனீ வளர்ப்பு மற்றும் பதப்படுத்துதல் பயிற்சி, காரமடை கெம்மாரம்பாளையத்தில் வழங்கப்பட உள்ளது.இந்த ஒரு மாத கால இலவச பயிற்சியில், பல்வேறு தொழில் வாய்ப்புகள், சந்தைப்படுத்துதல், திட்ட அறிக்கை தயாரித்தல், மத்திய மாநில அரசுகளின் பல்வேறு மானிய திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடித்தவர்களுக்கு, மத்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு, 99761 80670, 70129 55419, 87781 12776 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி