சிறு தொழில் நிறுவனங்களுக்கு குப்பை வரி அதிகாரிகள் நடவடிக்கை; தொழில்துறை அதிருப்தி
கோவை:கோவை மாநகராட்சியில், தொழில் வரி முறைப்படுத்தாமல், தோன்றிய கட்டணத்தை அதிகாரிகள் வசூலிப்பதாகவும், புதிதாக குப்பை வரி செலுத்த கட்டாயப்படுத்துவதால், சிரமம் ஏற்படுவதாகவும் தொழில்துறையினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கோவை மாவட்ட தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான, 'போசியா' நிர்வாகிகள் கூட்டம், வெட்கிரைண்டர் உற்பத்தியாளர்கள் சங்க (கவுமா ) அலுவலகத்தில் நடந்தது. போசியா கூட்டமைப்பின் கீழ் உள்ள, பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், முறையற்ற வரிவிதிப்பால் சிறு, குறு தொழில் நிறுவனத்தினர் திணறுகின்றனர்; மாநகராட்சி கமிஷனர் சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசி, முறையான வரியை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.'பவர் பேக்டர்' என்ற பெயரில், மின்வாரிய அதிகாரிகள் பயன்பாட்டுக்கு இணையாக அபராதம் விதித்து வருகின்றனர். மின்வாரிய தலைமை பொறியாளர்கள் சங்க பிரதிநிதிகளை அழைத்து, உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட, தீர்மானங்களை நிறைவேற்றினர். இதுகுறித்து, ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் கூறியதாவது: திடீர் ஆய்வுக்கு வரும் மாநகராட்சி அதிகாரிகள் முறையின்றி, தொழில்வரி, குப்பை வரி என விதிக்கின்றனர். இவ்வரி, ஒவ்வொரு இடத்திற்கும் பெரிய வேறுபாடுகளுடன் உள்ளது. சிறு, குறு தொழில் நிறுவனங்களில் குப்பை சேராது என்ற நிலையிலும், கடந்த ஒரு மாதமாக குப்பை வரி கட்ட நிர்பந்திக்கின்றனர்.மின்வாரியத்தில், பயன்பாட்டுக்கு இணையாக பவர் பேக்டர் அபராதம் விதிப்பதால் மாதந்தோறும், ரூ.3000, ரூ.4000 செலுத்த வேண்டியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இது குறித்து வழிகாட்டுதல் வழங்குவதுடன், உரிய நடவடிக்கையும் எடுக்க வேண்டும். வரும் 11ம் தேதி கோவைக்கு வருகை புரியும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சிறு, குறு தொழில்நிறுவனங்களை நேரடியாக பார்வையிட்டு, ஜி.எஸ்.டி., சார்ந்த இடர்பாடுகளை கேட்டறிய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார். இக்கோரிக்கைகள் அடங்கிய தீர்மானங்கள், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. போசியா நிர்வாகிகள் நடராஜ், ரவீந்திரன், சுருளிவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.