உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தகுதியானவர்களுக்கு பட்டா கொடுங்க! ஜமீன் முத்துார் மக்கள் வலியுறுத்தல்

தகுதியானவர்களுக்கு பட்டா கொடுங்க! ஜமீன் முத்துார் மக்கள் வலியுறுத்தல்

பொள்ளாச்சி:'இலவச வீட்டுமனைப்பட்டா தகுதியானவர்களுக்கு வழங்க வேண்டும்,' என, ஜமீன் முத்துார் கிராம மக்கள், பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.பொள்ளாச்சி அருகே, ஜமீன் முத்துார் புதுக்காலனியை சேர்ந்த மக்கள், இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க கோரி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.மக்கள் கூறியதாவது:ஜமீன் முத்துார் புதுக்காலனியில், 23 ஆண்டுகளாக வசிக்கிறோம். தினமும் வேலைக்கு சென்று கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து வருகிறோம். இப்பகுதியில் காலியாக இருந்த இடத்தில், எவ்வித அறிவிப்பும் இல்லாமல் வீடு உள்ளவர்களுக்கே இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது.இதை கண்டித்து, நேற்றுமுன்தினம் இரவு மறியலில் ஈடுபட்டோம். அப்போது, தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்க அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.வீடு இல்லாதவர்கள் நிறைய பேர், வாடகை வீட்டில் வசிக்கின்றனர். அவர்களுக்கு இந்த இடத்தை வழங்க வேண்டும். வீடு உள்ள இருவருக்கு வழங்கிய பட்டாவை ரத்து செய்து, வீடு இல்லாதோருக்கு வழங்க வேண்டும். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம்.இவ்வாறு, கூறினர்.இதையடுத்து, வருவாய்துறை அதிகாரிகள் பேச்சு நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததால் மக்கள் கலைந்து சென்றனர்.வருவாய்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஜமீன் முத்துார் புதுக்காலனியில், 78 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா கடந்த, 2000ம் ஆண்டு வழங்கப்பட்டது. அதில், இ - பட்டா, 73 பேருக்கு வழங்கப்பட்டது.மூன்று பேர் பட்டா, வாரிசு பிரச்னையில் நிலுவையில் உள்ளது. மீதம் உள்ள, இரண்டு பேருக்கு பட்டா வழங்கியும் வீடு கட்டாமல் காலியாக இருந்தது. எனவே, அவர்களது பட்டாவை ரத்து செய்து, இருவருக்கு வழங்கப்பட்டது. அரை ஏக்கர் பொது இடத்தில் பட்டா வழங்க இயலாது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை