பொள்ளாச்சி;தமிழகத்தில், அரசு போக்குவரத்துக் கழகம், ஒவ்வொரு மண்டலத்திலும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு மனஅழுத்த நிவாரணப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவை மண்டல ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு, பொள்ளாச்சி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையின், யோகா மற்றும் இயற்கை மருத்துவம் சார்பில் பிப்., மாதம் முதல் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.மாதந்தோறும் ஒரு நாள் தேர்வு செய்யப்பட்டு நடத்தப்படும் பயிற்சி வகுப்பில், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் ஆர்வமுடன் கலந்து கொள்கின்றனர்.அதன்படி, அரசு போக்குவரத்து கழக பொள்ளாச்சி பயிற்சி மையத்தில் நடந்த வகுப்பில் டாக்டர் அர்ச்சனா தலைமையில், தெரபிஸ்ட் விக்னேஷ் முன்னிலையில், 40 நிமிடம், யோகா பயிற்றுவிக்கப்பட்டது. இதில், 50க்கும் மேற்பட்ட பஸ் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.மேலும், வீட்டிலேயே எளிய ஆசனங்களைச் செய்து கொள்வதன் வாயிலாக, மனஅழுத்தத்தில் இருந்து விடுபடலாம்.வரும் காலங்களில், தொற்றா நோய்களான பக்கவாதம், மாரடைப்பு, சிறுநீரக பிரச்னை, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளன. தொற்றா நோய்கள் ஏற்படாமல் இருக்க, உணவுக் கட்டுப்பாடு, தினமும், 30 நிமிட நடைபயிற்சி அவசியம்.இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால், உடல் சோர்வு, மன அழுத்தம் போன்றவை தவிர்க்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது. அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர் பயிற்சி நிலையப் பொறுப்பாளர் சக்திகுமார், போக்குவரத்து ஆய்வாளர் வெங்கடாசலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.