அன்னுார்;கோவை மாவட்டத்தில், கிராம ஊராட்சிகளில், 100 சதவீதம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டதை உறுதி செய்ய மூன்றாம் தரப்பு நிறுவனம் வாயிலாக இன்று முதல் கள ஆய்வு நடக்கிறது.நாட்டில் கிராம ஊராட்சிகளில் 19 கோடியே 31 லட்சத்து 97 ஆயிரத்து 212 வீடுகள் உள்ளன. இந்த வீடுகளுக்கு ஜல்ஜீவன் உள்ளிட்ட இதர திட்டங்களில் 100 சதவீதம் குடிநீர் இணைப்பு வழங்க மத்திய அரசு ஜல்ஜீவன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.தமிழகத்தில் கிராம ஊராட்சிகளில் ஒரு கோடியே 25 லட்சம் 15 ஆயிரத்து 756 வீடுகள் உள்ளன. இவற்றில் 41 லட்சத்து,97 ஆயிரத்து,348 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டி உள்ளது. 228 ஊராட்சிகள்
இதில் கோவை மாவட்டத்தில் உள்ள 12 ஒன்றியங்களில் உள்ள 228 ஊராட்சிகளிலும் 100 சதவீதம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், ஊரக வளர்ச்சி முகமையின், கோவை மாவட்ட கூடுதல் கலெக்டர் சுவேதா சுமன், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கிராம ஊராட்சிகளில் 100 சதவீதம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டதை உறுதி செய்ய 'ஐபோஸ் ரிசர்ச் பிரைவேட் லிமிடெட்' என்னும் மூன்றாம் தரப்பு நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் ஊழியர்கள், கிராம ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளிலும், 22ம் தேதி (இன்று) முதல் ஆக. 10ம் தேதி வரை கள ஆய்வு செய்ய உள்ளனர்.எனவே, அனைத்து வட்டாரங்களில் உள்ள பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.ஊராட்சிகளில் உள்ள குக்கிராமம் வாரியாக பயனாளிகளின் விபரம், அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்படும் குடிநீர் அளவு மற்றும் கால அளவு, அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்ட நீர் மாதிரிகளின் விபரம், குடிநீர் மாதிரிகளின் ஆய்வுக்கூட பரிசோதனை விபரம் ஆகியவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும்.இவ்வாறு கூடுதல் கலெக்டர் கடிதத்தில் தெரிவித்துள்ளார். 30,746 வீடுகள்
ஜல் ஜீவன் மிஷன் அறிக்கைப்படி, கோவை மாவட்டத்தில், அன்னூர் ஒன்றியத்தில், 21 ஊராட்சிகளில் 30,746 வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சியில், 4,503 வீடுகளுக்கும், குறைந்தபட்சமாக அல்லப்பாளையம் ஊராட்சியில் 430 வீடுகளுக்கும், குடிநீர் இணைப்பு தரப்பட்டுள்ளது.சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்தில் 21 ஆயிரத்து 56 வீடுகளில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கீரணத்தம் ஊராட்சியில், 5,694 வீடுகளுக்கும், குறைந்தபட்சமாக அக்ஹார சாமக் குளம் ஊராட்சியில் 1,162 வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு தரப்பட்டுள்ளது. மூன்றாவது நிறுவனம் வாயிலாக கள ஆய்வு செய்யும் போது, கிராம ஊராட்சிகளில் உண்மையில் 100 சதவீதம் வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதா என தெரிய வரும்.