உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தொழில்முனைவோராக உருவாக பட்டயப்படிப்பு விருப்பமுள்ள பட்டதாரிகளுக்கு அரசு அழைப்பு

தொழில்முனைவோராக உருவாக பட்டயப்படிப்பு விருப்பமுள்ள பட்டதாரிகளுக்கு அரசு அழைப்பு

கோவை : தமிழக அரசு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மூலமாக, தொழில் முனை வோராக விரும்பும் பட்டதாரிகளை கண்டறிந்து, ஓராண்டு பட்டயப்படிப்பு வழங்க முடிவு செய்துள்ளது. இப்படிப்பை, தமிழ்நாடு தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்க நிறுவனம், ஆமதாபாத்தில் உள்ள இ.டி.ஐ., நிறுவனத்துடன் இணைந்து வழங்க இருக்கிறது.ஓராண்டுக்கு, 500 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். ஏதேனும் ஒரு இளங்கலை கல்வியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு நிர்ணயித்துள்ள கட்டணம், 80 ஆயிரம் ரூபாய்; கூடுதல் செலவினங்களுக்கு, 20 ஆயிரம் ரூபாய் சேர்த்து, ஒரு லட்சம் ரூபாய் செலவாகும். இப்பயிற்சி வேலை பெறுபவதற்கு அல்ல; வேலைவாய்ப்பு உருவாக்கும் தொழில் முனைவோராக மாறுவதற்கு அரசு எடுக்கும் முயற்சி.இதற்கு ஆமதாபாத் இ.டி.ஐ., நிறுவனம் ஆன்-லைன் முறையில் நடத்தும் நுழைவுத்தேர்வில் பங்கேற்க வேண்டும்; அதன்பின், நேர்காணல் நடத்தப்படும். ஆன்லைன் தேர்வுக்கு, 60 சதவீத மதிப்பெண்; நேர்காணலுக்கு, 40 சதவீத மதிப்பெண் வழங்கப்படும். நுழைவுத்தேர்வுக்கு, www.editn.inஎன்ற இணைய தளம் வழியாக விண்ணப்பிக்கலாம்; கட்டணம் இல்லை. ஜூலை 1ல் பட்டயப் படிப்பு துவங்குகிறது.இதுதொடர்பான விளக்கக் கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது; தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் உமாசங்கர் பஙகேற்று, விளக்கினார். கலெக்டர் கிராந்திகுமார் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., ஷர்மிளா முன்னிலை வகித்தார்.அதன்பின், உமாசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது: தொழில்முனைவோர் உருவாக்குவதற்கான பட்டயப்படிப்பு, ஜூலை 1ல் துவங்குகிறது; ஓராண்டுக்கு, 500 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும்; ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒதுக்கீடு வழங்கப்படும். தொழில் முனைவோராக விரும்பும் நபர்களுக்கு, தேவையான அறிவாற்றலை கற்பிக்க இம்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. வேலைவாய்ப்பை உருவாக்கும் தொழில்முனைவோரை உருவாக்குவதே அரசின் முயற்சி. அடுத்த கட்டமாக அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.மாற்றுத்திறனாளிகளும் விண்ணப்பிக்கலாம்; கட்டண சலுகை அளிக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறது. ஒரு நிறுவனத்தை துவக்க நினைப்பவர்கள், நான்கு அல்லது ஐந்து யோசனைகளை கைவசம் வைத்திருப்பர். அதனால், ஓராண்டில் 500 தொழில்முனைவோரை உருவாக்கினால், அது சாதாரண விஷயமல்ல. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ