ரேஷன் பணியாளர் குறை தீர் கூட்டம்
கோவை:கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள், அதிகாரிகள் மற்றும் நிர்வாகம் இடையே இணக்கமான சூழலை உருவாக்கி, குறைகளுக்கு தீர்வு காண, இணை பதிவாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.அதன் அடிப்படையில் வரும் 13ம் தேதி, கோவையில் கூட்டுறவு சங்கங்கள் சார்பில் குறை தீர்ப்பு கூட்டம் நடக்க உள்ளது. இது குறித்து, தமிழக அரசு ரேஷன் கடைப்பணியாளர் சங்க மாநிலத்தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:இந்த குறை தீர்ப்பு கூட்டத்தில், புகார் மற்றும் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்ட மனுக்கள், தொடர்பாக விவாதிக்கப்பட்டு, கூட்ட தீர்மானம் பதியப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட புகார்களுக்கு, தீர்வு காணப்படவில்லை. இந்த கூட்டத்தில் ரேஷன் கடைப்பணியாளர்கள் தெரிவிக்கும் புகார்களுக்கு தீர்வு வேண்டும். குறிப்பாக, ரேஷன் பொருட்கள் சப்ளை செய்யப்படும் போது, எடை குறைவாக வழங்கப்படுகிறது. பொருள் சப்ளை செய்யும் லாரிகளை, வே பிரிட்ஜில் எடை போட்டு பிறகு எடை அளவை சரி பார்க்க வேண்டும். விடுமுறை நாட்களில் பொருட்கள் சப்ளை செய்யக்கூடாது. தரமான பொருட்களை பொட்டலங்களில் வழங்க வேண்டும், பாமாயில், பருப்பு பிரச்னைக்கு தீர்வு வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் உள்ளன.இந்த கூட்டத்தில், இவற்றுக்கு தீர்வு காண வேண்டும். பெறப்பட்ட புகார் மனுக்கள் மீது, இரு மாதங்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.