| ADDED : ஜூன் 26, 2024 09:42 PM
உடுமலை : உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில், குறைந்த தண்ணீர் வசதியுள்ள பகுதியில், சொட்டு நீர் பாசனம் அமைத்து, விவசாயிகள் காய்கறி சாகுபடியில், ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், சில விவசாயிகள் பழ மரங்கள் சாகுபடி செய்யவும் ஆர்வம் காட்டுகின்றனர்.தோட்டக்கலைத்துறையினர் கூறியதாவது: பழவகை மரங்களில், நிலையான விலை மற்றும் மருத்துவ பயனுள்ளதாகவும் உள்ள மாதுளையை அனைத்து விவசாயிகளுக்குமே நடவு செய்து பயன்பெறலாம். மாதுளையில் கோ - 1, ஏற்காடு - 1, உட்பட பல ரகங்கள் உள்ளன. சில வகைகள் விதையுடனும், சில விதை இல்லா குணங்களும் கொண்டவை.வேர்விட்ட குச்சிகள் வாயிலாக, ஒரு ஏக்கருக்கு, ஒரு ஆண்டுக்கு, 16 டன் பழங்கள் மகசூலாக பெறலாம்.ஏக்கருக்கு, 650 முதல், 700 கன்றுகள் வரை நட்டு பலன் பெறலாம். வரிசைக்கு வரிசை 2.5மீ., இடைவெளி விட்டு குழிகள் அமைத்து, மண்புழு, உயிர் உரங்கள் இட்டு நடவு செய்ய வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை காய்ந்துள்ள கிளைகளை அகற்றி, கவாத்து செய்ய வேண்டும்.பறவை வலைகள் மற்றும் விளக்கு பொறி வைப்பது அவசியம். பூக்கும் தருணங்களில் பூச்சி அரிப்பதிலிருந்து கிளைகளை பாதுகாப்பது அவசியம். பழத்தை தாக்கும் பழ ஈக்களை அவைகளுக்கான பொறி வாயிலாக எளிதில் அழித்து விடலாம்.இவ்வாறு, அத்துறையினர் தெரிவித்தனர்.