உடுமலை : குரு பெயர்ச்சியை முன்னிட்டு, உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் யாகசாலை பூஜை நடந்தது.நவகிரஹங்களில் சுப பலன்களை அருளும் குருபகவான், ஒவ்வொரு ராசியிலும், ஓராண்டு காலம் சஞ்சாரம் செய்கிறார். குரு சஞ்சாரம் செய்யும் வீடுகளை காட்டிலும், 5, 7, 9ம் பார்வை பெறும் ராசிகள் அதிக பயன்பெறுகின்றன.கடந்த ஓரண்டாக மேஷ ராசியில் இருந்து வந்த குருபகவான், நேற்று மாலை, 5:21 மணிக்கு ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். இதையொட்டி, கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.அவ்வகையில், உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், நேற்று மாலை யாகசாலை பூஜைகள் நடந்தன. குருபகவான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதில், உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பொள்ளாச்சி
குரு பெயர்ச்சியை முன்னிட்டு, பொள்ளாச்சி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. குள்ளக்காபாளையம் தர்மசாஸ்தா மகா கணபதி கோவில், கரப்பாடி அமணலிங்கேஸ்வரர் கோவில், தொண்டாமுத்துார் அம்மையப்பர் லிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.அதேபோன்று, பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவில், சேரன் தொழிலாளர் காலனி செல்வ விநாயகர் கோவில் உள்ளிட்ட கோவில்களில், மகா அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.