மேட்டுப்பாளையம் : கைத்தறி நெசவாளர்களுக்கு என, தனியாக கைத்தறி நெசவாளர் கூட்டுறவு வங்கி அமைக்க வேண்டும் என, சிறுமுகையில் நடந்த தேசிய கைத்தறி தின விழாவில் தீர்மானம் நிறைவேற்றினர். சிறுமுகையில் அனைத்து கைத்தறி பட்டு சேலை உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் சார்பில், தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்பட்டது. சிறுமுகை தியேட்டர் மேட்டில் நடந்த விழாவுக்கு சங்கத் தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். செயலாளர் வெங்கடேஷ் வரவேற்றார். இணை செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், கைத்தறி நெசவாளர்களுக்கு என, தனியாக கைத்தறி நெசவாளர் கூட்டுறவு வங்கி அமைக்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கைத்தறி தொழில் நலிவடைந்து வருவதால், இந்த தொழிலை மேல்நிலைக்கு கொண்டு வரவும், இத்தொழிலை நம்பியுள்ள, நெசவாளர்களின் வாழ்வாதாரம் உயர்வடைய, கைத்தறி சேலைகளை ஏற்றுமதி செய்வதற்கான வசதிகளை, அரசுகள் செய்து கொடுக்க வேண்டும். கைத்தறி நெசவுக்கு தேவையான, மூலப்பொருள்களான பட்டு, ஜரிகை, நூல் ஆகியவற்றை மத்திய, மாநில அரசுகள் சந்தை விலையை நிர்ணயம் செய்ய வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விழாவில் கவுரவத் தலைவர் பெருமாள்சாமி, ஒருங்கிணைப்பாளர் விமலராஜன் உள்பட சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர். உதவித் தலைவர் குமார் நன்றி கூறினார். விழா முடிவில், ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான, சேலைகள், பெண்கள் ஆடைகள், அரிசி, உணவுப் பொருட்கள் ஆகிய நிவாரண பொருட்களை, சங்கத்தினர் கேரள மாநிலம் வயநாடிற்கு, தனி வாகனத்தில் கொண்டு சென்றனர். சோமனுார்
தமிழ்நாடு நெசவு தறிக்காரர்கள் வாழ்வுரிமை இயக்கத்தின் சார்பில், தேசிய கைத்தறி நெசவாளர் தினம் கொண்டாடப்பட்டது. சோமனூர், வாகராயம்பாளையம்,வினோபா நகர், அய்யன் நகர், ஆகிய இடங்களில் மாநில ஒருங்கிணைப்பாளர் ராமசாமி தலைமையில் கொடியேற்று விழா நடந்தது. மாநில செயலாளர் கணேசன், கருமத்தம்பட்டி நகராட்சி தலைவர் மனோகரன், சுப்பிரமணியம், மூர்த்தி ஆகியோர், வயது முதிர்ந்த நெசவாளர்கள், 250 பேருக்கு, வேஷ்டி, சேலைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என, நிர்வாகிகள் வலியுறுத்தினர்.