உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தார்பாலின் தொங்க விட்டு வரண்டாவில் வகுப்பறை! அரசு பள்ளியில் கல்வி கற்பதில் எவ்ளோ பிரச்னை இடநெருக்கடியால் தவிக்கும் மாணவ, மாணவியர்

தார்பாலின் தொங்க விட்டு வரண்டாவில் வகுப்பறை! அரசு பள்ளியில் கல்வி கற்பதில் எவ்ளோ பிரச்னை இடநெருக்கடியால் தவிக்கும் மாணவ, மாணவியர்

பொள்ளாச்சி;'ஏய்... நீ இவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்த; எந்திரிடா நானும் கொஞ்ச நேரம் உட்கார்ந்துக்கறேன்.' இந்த உரையாடல் வேறு எங்கும் அல்ல... பொள்ளாச்சி ஆர்.கோபாலபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பேசிக்கொண்டது தான். என்ன விஷயம்னு தெரிஞ்சுக்க முழுசா படியுங்க!பொள்ளாச்சி, ஆர்.கோபாலபரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கடந்த, 2021ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. பள்ளி தரம் உயர்த்தினாலும், கட்டட வசதியில்லை. பள்ளியின் மொத்த பரப்பளவு, 25 சென்ட் ஆகும். இங்கு, 20 குழந்தைகளுடன் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. இரண்டு கட்டடங்களில் ஐந்து வகுப்பறையுடன் செயல்படும் தொடக்கப்பள்ளியில், 119 மாணவர்கள் படிக்கின்றனர்.இதே பள்ளி வளாகத்தில் தனி கட்டட வசதியில்லாதல் உயர்நிலைப்பள்ளி, இரண்டு கட்டடங்களில் உள்ள, மூன்று வகுப்பறைகளில் செயல்படுகிறது. இதில், ஆறு முதல், பத்தாம் வகுப்பு வரை, 175 மாணவர்கள் படிக்கின்றனர்.மூன்று வகுப்பறைகளில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு வகுப்பறையும், ஒன்பதாம் வகுப்பு, தலைமையாசிரியர், அலுவலக அறையும், 8ம் வகுப்பு மற்றும் ஆசிரியர் அறையுடன் ஒரு வகுப்பறை உள்ளன. ஆறு மற்றும், ஏழாம் வகுப்புக்கு வராண்டாவில் வகுப்புகள் செயல்படுகின்றன.

தொடரும் அவலம்!

பள்ளி வராண்டாவில், வெயில் நேரத்தில் மரத்தடி நிழலிலும், மாலை நேரத்தில் தண்ணீர் தொட்டி அருகே மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளதால், மழை அவ்வப்போது பெய்கிறது. இதனால், மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதில் இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக, வகுப்பறை முன் உள்ள வராண்டாவில் தார்பாலின் கட்டப்பட்டுள்ளன.ஒருவரையொருவர் ஒட்டி அமர வைத்தும், ஒரு பாடம் நடத்தும் போது, மற்ற வகுப்பறை மாணவர்களை, பள்ளி வளாகத்தில் அமர வைக்கும் அவல நிலை நீடிக்கிறது. தற்போது மழை காலத்தில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க ஆசிரியர்கள் படாதபாடு படுகின்றனர். கடந்த, மூன்று ஆண்டாக தொடரும் இந்த அவல நிலைக்கு தீர்வு கிடைக்கவில்லை.

இடம் கிடைக்கலை!

அரசு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பின், அதற்கான வகுப்பறை கட்டுவதற்கான இடம் தேர்வு செய்ய ஆய்வு செய்த போது, அரசுக்கு சொந்தமான நிலமே ராமபட்டிணம் ஊராட்சிக்கு உட்பட்ட கோபாலபுரத்தில் இல்லை.தற்போதுள்ள வகுப்பறை கட்டடத்தின் மீது, மற்றொரு கட்டடம் கட்டலாம் என்றால், தற்போதுள்ள கட்டடம் அந்த அளவுக்கு வலுவானதாக இல்லை என கூறப்படுகிறது.நெருக்கடியான இடத்தில், இரண்டு குடிநீர் மேல்நிலைத்தொட்டிகளும் கட்டப்பட்டுள்ளதால் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட இடவசதியில்லை.நபார்டு திட்டத்தில் கட்டடம் கட்டலாம் என்றால் அதற்கான இடம் தர யாரும் முன்வரவில்லை. அரசும், கட்டடம் கட்டுவதற்கான திட்டத்துக்கு மாற்று ஏற்பாடு குறித்து சிந்திக்க கூட இல்லை. இதனால், மாணவர்களின் நிலை திண்டாட்டமாக உள்ளது.

கல்வியாளர்கள் வேதனை

கல்வி ஆர்வலர்கள் கூறியதாவது:தமிழக - கேரளா எல்லையில் அமைந்துள்ள கிராமங்களில் வசிப்போரின், ஒரே கல்வி ஆதாரமாக உயர்நிலைப்பள்ளி உள்ளது. தொடக்கப்பள்ளி அளவுக்கு, உயர்நிலைப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை உள்ளது.ஆனால், இடப்பற்றாக்குறை பிரச்னைக்கு தீர்வு காண ஏன் அக்கறை காட்டவில்லை. ஏழை, நடுத்தர மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நிலம் இல்லாத சூழலில், இப்பள்ளிக்கு என நிலம் வாங்கி வகுப்பறை கட்டடம் கட்ட அரசு நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

கழிப்பிடத்திலும் பிரச்னை தான்!

ஆண்கள், பெண்கள் என நான்கு கழிப்பிடங்கள் உள்ளன. இட நெருக்கடியுடன் கட்டப்பட்டுள்ள கழிப்பிடங்களை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மாணவியர், மாணவர்கள் கழிப்பிடம் எதிர் எதிரே கட்டப்பட்டுள்ளது. இதனால், மாணவியர் கழிப்பிடம் செல்வதை தவிர்க்கும் அவல நிலை உள்ளது.மாணவ, மாணவியர் என தனித்தனியாக இயற்கை உபாதைகளை கழிக்க நேரம் பிரித்து கொடுக்கும் அவல நிலை நீடிக்கிறது. இப்பிரச்னையால் ஆசிரியர்கள், இங்குள்ள கழிப்பிடத்தையே பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

lana
ஜூலை 27, 2024 17:28

எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி இது. டாஸ்மாக் சரக்கு இல்லை என்றால் மட்டும் கவலை படும் ஆட்சி


Ram pollachi
ஜூலை 27, 2024 14:22

இதை விட மோசமான நிலையில் இருந்த பள்ளியில் படித்து வளர்ந்தவர்களில் நானும் ஒருவன்.. காய்கறி மார்க்கெட் மராமத்து பணிகள் நடப்பதால் பொள்ளாச்சி கோட்டூர் ரோடு தொடக்க பள்ளி வளாகத்தில் காய்கறி மார்க்கெட் செயல்படுகிறது ... பெண்கள் மேல்நிலை பள்ளியின் கிணறு கழிவு நீர் உந்தும் நிலையமாக இது மாதிரி பல விசயங்கள் உண்டு.


ஆரூர் ரங்
ஜூலை 27, 2024 12:26

சமாதி, மணிமண்டபம் முக்கியம்.


R MUTHALI (RMN)
ஜூலை 27, 2024 02:28

Helping people always be there. while posting such type of news, school address and contact numbers to be provided so as to connect them. It will not be possible to join with them if distance is more. hence, phone number & addresses must


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை