| ADDED : ஆக 17, 2024 12:43 AM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, 51 ஆண்டுகளுக்கு பின் படித்த பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்தித்து தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.பொள்ளாச்சி அருகே, ஜக்கார்பாளையம் எம்.என்.எம்., உயர்நிலைப்பள்ளியில் கடந்த, 1973ம் ஆண்டு, 'பியுசி' படித்த, 36 மாணவ, மாணவியர், சந்திக்க திட்டமிட்டனர்.அதன்படி, மாணவர்கள் ஒருங்கிணைந்து, பள்ளி வளாகத்தில், 51 ஆண்டுகளுக்கு பின் சந்தித்தனர். குடும்பத்துடன் பங்கேற்று, ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு, ஆரத்தழுவி மகிழ்ந்தனர்.பள்ளியில் படித்த போது நடந்த இனிமையான நிகழ்வுகளை பகிர்ந்து மகிழ்ந்தனர். தொடர்ந்து, வாழ்வில் சந்தித்த சவால்கள் உள்ளிட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.இந்ந நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் முருகநாதன் வரவேற்றார். பள்ளி செயலர் கல்யாணசாமி தலைமை வகித்தார்.பள்ளியில் படித்த போது வகுப்பு எடுத்த ஆசிரியர்களை அழைத்து கவுரவித்தனர். அதில், 90 வயதான ஆசிரியர் வேலுமணி பங்கேற்று மாணவர்கள் படித்தது, அவர்களின் குறும்புத்தனங்களை பகிர்ந்து கொண்டதுடன், அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். இது மாணவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.பள்ளி வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதுடன், பொருளாதார ரீதியாக தேவையான உதவிகளை செய்து தருவதாக முன்னாள் மாணவர்கள், பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்தனர். தொடர்ந்து, ஆண்டுதோறும் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.