மக்காச்சோள அறுவடை தீவிரம் விலை உயர்வால் மகிழ்ச்சி
சூலுார்,; சுல்தான்பேட்டை வட்டாரத்தில் மக்காச்சோள அறுவடை தீவிரமடைந்துள்ளது.சுல்தான்பேட்டை வட்டாரத்தில் வதம்பச்சேரி, வாரப்பட்டி, ஜல்லிப்பட்டி, பொன்னாக்காணி, போகம்பட்டி, இடையர் பாளையம், செலக்கரச்சல் உட்பட பல்வேறு கிராமங்களில், மூன்று மாதத்துக்கு முன், ஆயிரத்து, 500 ஏக்கர் பரப்பில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டது. நன்கு வளர்ந்த பயிர்கள் தற்போது அறுவடைக்கு வந்துள்ளன. இதையடுத்து, பல கிராமங்களில் அறுவடை பணி தீவிரமடைந்துள்ளது. இவ்வாண்டு விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ''மக்காச்சோளமானது கோழித் தீவனமாகவும், பாப்கார்ன் மற்றும் ஊட்டச்சத்துமாவு தயாரிக்கப் பயன்படுகிறது. ஒரு ஏக்கர் பயிரிட, 25 முதல், 30 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. தற்போது, கிலோ ஒன்று, 26 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. கடந்தாண்டை விட ஒரு ரூபாய் அதிகரித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. படைப்புழு தாக்குதல் அதிகம் இருந்ததால், மகசூல் குறைந்துள்ளது. ஒரு ஏக்கருக்கு நாட்டு ரகம், 12 குவிண்டாலும், ஹைபிரிட் ரகம், 22 குவிண்டாலும்மகசூல் கிடைக்கிறது. தேவை அதிகரித்துள்ளதால், மக்காச்சோள அறுவடைப்பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டுகின்றனர்,'' என்றனர்.