உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அம்மாசை கொலை வழக்கில் இழப்பீடு அவரது மகள் கலெக்டரிடம் கேட்கிறார்

அம்மாசை கொலை வழக்கில் இழப்பீடு அவரது மகள் கலெக்டரிடம் கேட்கிறார்

கோவை:அம்மாசை என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், எஸ்.சி., -எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டப்படி இழப்பீடு வழங்க, அவரது மகள் கோரிக்கை விடுத்துள்ளார். கோவை, ரத்னபுரியில் வசித்து வந்தவர் அம்மாசை,45; சொத்து வழக்கு சம்பந்தமாக, வக்கீல் இ.டி.ராஜவேல் என்பவரை சந்திக்க, கடந்த 2011, டிச., 11 ல் கோபாலபுரத்திலுள்ள அலுவலகத்திற்கு சென்றவர் மாயமானார். போலீசார் விசாரிக்கையில், ராஜவேல், அவரது மனைவி மோகனா, பொன்ராஜ், பழனிச்சாமி ஆகியோர் சேர்ந்து அம்மாசையை அடித்து கொலை செய்தது தெரிய வந்தது. ராஜவேலுவின் மனைவி மோகனாவை, நிதி நிறுவன மோசடி வழக்கு ஒன்றில் ஒடிசா போலீசார் தேடி வந்தனர். இதனால், வழக்கில் இருந்து தப்பிக்க, மோகனா உயிருடன் இருக்கும் போதே, அவர் இறந்து விட்டதாக சான்றிதழ் பெறுவதற்கு, அம்மாசை என்ற பெண்ணை திட்டமிட்டு கொலை செய்ததும், மோகனா இறந்து விட்டதாக கூறி, அம்மாசை சடலத்தை எரித்து போலி சான்று பெற்றதும் தெரிய வந்தது. ராஜவேல், மோகனா, உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ராஜவேல்,52, மோகனா,48, பழனிச்சாமி ஆகியோருக்கு, கடந்த 2020, டிச., 30 ல், ஆயுள்சிறை விதித்து, கோவை கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது. சிறை தண்டனை அனுபவித்து வந்த வக்கீல் ராஜவேல், சிறைக்குள் தற்கொலை செய்தார். அப்ரூவராக மாறி, பிறழ் சாட்சி அளித்த பொன்ராஜ் மீது, தனியாக வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையில், அம்மாசையின் மகள் சகுந்தலா தேவி,39, கோவை மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளார். அதில், அவர் கூறியுள்ளதாவது:எனது தாயார் அருந்தியர் இனத்தை சார்ந்தவர் என்பதால், கொலை வழக்கில், எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவை சேர்க்க, பலமுறை கோரிக்கை விடுத்தோம். ஆனால், போலீஸ் அதிகாரிகள் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவை சேர்க்கவில்லை. இதனால், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், என்னால் இழப்பீடு தொகை பெற முடியவில்லை.இதற்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். வறுமையில் வாழ்ந்து வருவதால், எனக்கு இழப்பீடு தொகை கிடைக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி