பொள்ளாச்சி : ஆனைமலை புலிகள் காப்பகத்தில், புகார் தெரிவிக்கும் எண்ணை அறிமுகப்படுத்தி, வனவிலங்குகளை, பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொள்ளாச்சி அருகே, மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது ஆனைமலை புலிகள் காப்பகம். இங்குள்ள, வால்பாறை சிறந்த சுற்றுலாத்தலமாக உள்ளது. நீர்தேக்கங்கள், அணைகள், கோவில்கள், தேயிலை தோட்டங்கள் மற்றும் வனவிலங்குகளைக் காண அதிகப்படியான சுற்றுலா பயணியர் வருகை புரிகின்றனர்.சுற்றுலா பயணியர் வருகை காரணமாக, வனம் ஒட்டிய சாலையில், வனத்துறை வாயிலாக ஆங்காங்கே, விழிப்புணர்வு அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.அதில், குரங்குகளுக்கு உணவளிக்காதீர், யானை கடக்கும் பகுதி, வாகனங்களை நிறுத்தக் கூடாது, வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழையக் கூடாது, என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.இருப்பினும், சிலர், மலைப்பாதையில், வாகனங்களை நிறுத்தி 'போட்டோ' மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வருகின்றனர். அப்போது, வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதும் கண்டறியப்படுகிறது.இதேபோன்று, திருப்பூர் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட ஒன்பதாறு சோதனைச்சாவடி முதல் சின்னாறு வரையிலான மலைப்பாதையில், யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் உள்ளன. உடுமலையில் இருந்து இந்த வழித்தடத்தில் மறையூர், காந்தலுார், மூணாறு பகுதிக்கு அதிகளவில் சுற்றுலா பயணியர் செல்கின்றனர்.அப்பகுதியில், சுற்றுலா பயணியர்களால் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என, ஆங்காங்கே விழிப்புணர்வு அறிவிப்பு வைத்துள்ளனர். ஆனால், அத்துமீறல்கள் அதிகளவில் அரங்கேறுகிறது.இத்தகைய விதிமீறலைக் கண்டறிந்து, உடனே புகார் தெரிவிக்கும் வகையில் 'வாட்ஸ்ஆப்' எண்ணை அறிமுகப்படுத்தி, ஆங்காங்கே அறிவிப்பாக இடம்பெறச் செய்ய வேண்டும்.தன்னார்வலர்கள் கூறியதாவது:தண்ணீர், உணவு தேடி வரும் யானை, வரையாடு உள்ளிட்ட விலங்கினங்கள், அவ்வப்போது சாலையை கடந்து செல்கின்றன. அதனை போட்டோ, வீடியோ எடுக்க சிலர் ஆர்வம் காட்டுகின்றனர்.அதேநேரம், அவ்வழியே செல்லும் இயற்கை ஆர்வலர்கள், அவர்களின் செயலைக் கண்டிக்க முடிவதில்லை. எனவே, புகார் தெரிவிக்கும் வகையில் 'வாட்ஸ்ஆப்' எண் அறிமுகப்படுத்த வேண்டும்.அப்போது, வனவிலங்குகள், இயற்கை சார்ந்த புகார்கள் மற்றும் தகவல்களை உடனுக்குடன் வனத்துறைக்கு பதிவிடலாம். அதன் மீது, விரைந்து நடவடிக்கையும் எடுக்க முடியும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
ஆலோசனை செய்யப்படும்!
ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியன் கூறியதாவது:மலைப்பாதையில், வரையாடு, சிங்கவால்குரங்கு உள்ளிட்ட விலங்கினங்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதை கண்டறிந்து தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதற்காக, தலா, இரு வனக்காப்பாளர் அடங்கிய குழுவினர், ஆங்காங்கே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டும் வருகின்றனர்.இதுதவிர, வாகனம் வாயிலாக நெடுஞ்சாலை ரோந்தும் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், சுற்றுலாப் பயணியர் எவரேனும் வனவிலங்குகளுக்கு இடையூறு செய்வது, வனத்தில் அத்துமீறிய செயல்களில் ஈடுபடுவதை கண்டறிந்தால் அக்குழுவினருக்கு தகவல் தெரிவிக்கலாம். அதற்கேற்ப சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இனி வரும் நாட்களில், பொதுமக்களும், தன்னார்வலர்களும், வனக்குற்றம் மற்றும் அத்துமீறல் குறித்து புகார் தெரிவிக்கும் வகையில் 'வாட்ஸ்ஆப்' எண் வெளியிடவும் ஆலோசிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.