அடிப்படை வசதிகளை மேம்படுத்திக்கொடுங்க! கோட்ட வனக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
பொள்ளாச்சி:'ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு அரசு திட்டங்கள் அனைத்தும் கிடைக்கும் வகையில், தனி அரசாணை வெளியிட வேண்டும்,' என வனக்குழு மாவட்ட கமிட்டி உறுப்பினர் தெரிவித்தார்.பொள்ளாச்சி கோட்ட அளவிலான வனக்குழு கூட்டம், சப் - கலெக்டர் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நடந்தது. சப் - கலெக்டர் கேத்ரின் சரண்யா தலைமை வகித்தார். சப் - கலெக்டரின் நேர்முக உதவியாளர் அரசகுமார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல தனி தாசில்தார் ரேணுகாதேவி மற்றும் வனத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், பழைய சர்க்கார்பதியில், 14 பேருக்கு வீட்டு மனைப்பட்டா, அனுபவ உரிமை பட்டா வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.நெடுங்குன்றா பகுதியில் ரோடு வசதி ஏற்படுத்தித்தர வேண்டும்; எருமைப்பாறையில், மின் இணைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.பின்னர், பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில், புதியதாக கட்டப்படும் குடியிருப்புகளின் தற்போதைய பணிகள் குறித்து சப் - கலெக்டர் கேட்டறிந்தார். தொடர்ந்து, பழங்குடியின மக்களுக்கு சோலார் விளக்கு தேவைகள் குறித்து கேட்டறியப்பட்டன.மாவட்ட வனக்குழு கமிட்டி உறுப்பினர் தங்கசாமி கூறியதாவது:வன உரிமைச்சட்டத்தின்படி, மின் இணைப்பு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும், வீடுகள் முறையாக கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனைமலை புலிகள் காப்பகத்தில், வன உரிமைச்சட்டத்தின் படி உரிமைகள் வழங்குவதில் இடையூறு ஏற்படுகிறது. வன உரிமைச்சட்டத்தை முழுமையாக செயல்படுத்தினால் மட்டுமே பழங்குடியின மக்கள் பயன்பெற முடியும். ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு முறை பின்பற்றப்படுகிறது.அரசின் திட்டங்கள் கிடைக்க போராடுகிறோம். ஆனைமலை புலிகள் காப்பகமாக உள்ள சூழலில், இங்கு வசிக்கும் மக்கள் அரசின் திட்டங்கள் அனைத்தும் கிடைக்கும் வகையில், அரசு ஒரு அரசாணை வெளியிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு வாழும் மக்களின் குறைகள் தீர்க்கப்பட வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.