பிளக்ஸ் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு; கண்டுகொள்ளாத போலீசார்
வால்பாறை; வால்பாறை நகரில், பல்வேறு இடங்களில் விதிமுறையை மீறி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டுகளை அகற்ற, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறை நகரம் மிகவும் குறுகலான பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில், பல்வேறு கட்சிகளின் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகள், கட்சித்தலைவர்களின் பிறந்தநாள் விழாவுக்கு, ரோட்டில் பிளக்ஸ் வைக்கபட்டுள்ளது.குறிப்பாக, புதிய பஸ் ஸ்டாண்ட் முதல் போஸ்ட் ஆபீஸ் வரையிலும் உள்ள ரோட்டில், அரசியல் கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு, பிளக்ஸ் பேனர்களை ரோட்டின் ஓரத்தில் வைத்துள்ளனர்.இதனால், இந்த வழியாக வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாவதோடு, ரோட்டில் நடந்து செல்பவர்களுக்கும் போதிய பாதுகாப்பில்லாத நிலை உள்ளது.குறிப்பாக, மக்கள் அதிகளவில் வந்து செல்லும் காந்திசிலை வளாகம், அண்ணாசிலை வளாகம் சுற்றியும் அதிகளவில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. பிளக்ஸ் பேனர்களை அகற்ற, போலீசார் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கின்றனர்.பொதுமக்கள் கூறியதாவது:சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்லும், வால்பாறை நகரில் அரசியல் கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு பிளக்ஸ் பேனர்களை வைக்கின்றனர்.வால்பாறையில் தற்போது பலத்த காற்று வீசும் நிலையில், பிளக்ஸ் பேனர்கள் சரிந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.பெரிய அளவில் விபத்து ஏற்படுவதற்கு முன், நகரில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி பிளக்ஸ் பேனர்களை அகற்ற, போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.