மேலும் செய்திகள்
எரியூட்டும் மயானம் பயன்பாட்டிற்கு அனுமதி
03-Feb-2025
கோவை; கோவை, பீளமேடு பகுதியில் உள்ள மயானத்தின் ஒரு பகுதியில், குப்பை தரம் பிரிக்கும் மையம் கட்ட, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கு, ம.தி.மு.க., கவுன்சிலர் சித்ரா மற்றும் அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.கோவை மாநகராட்சி, 26வது வார்டுக்கு உட்பட்ட பீளமேடு விளாங்குறிச்சி ரோட்டில், இந்து சமுதாய மக்கள் பயன்படுத்தும் மயானம் இருக்கிறது.மயானப் பகுதியை சுருக்கி, அதன் வளாகத்தில், பிளாஸ்டிக் குப்பையை தரம் பிரிக்கும் மையம் கட்ட, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.அதற்காக, மயானப் பகுதியை சமப்படுத்தும் பணி, நடந்து வந்தது. இதையறிந்ததும், அப்பகுதியை சேர்ந்த பா.ஜ.,வினர், பொதுமக்கள் மற்றும் ம.தி.மு.க., கவுன்சிலர் சித்ரா உள்ளிட்டோர் திரண்டனர். மயானப் பகுதியை வேறு பயன்பாட்டுக்கு மாற்றக் கூடாதென எதிர்ப்பு தெரிவித்து, சமப்படுத்தும் பணியை தடுத்து நிறுத்தினர்.இதுதொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம், கவுன்சிலர் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. அதில், 'மயானத்தை பீளமேடு, ஹோப் காலேஜ், காந்தி மாநகர் மற்றும் விளாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர்கள் பயன்படுத்துகின்றனர். குப்பை பிரிக்கும் பகுதியாக மாற்றினால், பொதுமக்களிடம் அதிருப்தி ஏற்படும். இப்பணியை உடனடியாக நிறுத்த வேண்டும்' என, கூறியுள்ளார்.மாநகராட்சி வடக்கு மண்டல அதிகாரிகள் கூறுகையில், 'பீளமேடு மயானம் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் இருக்கிறது. மயானத்துக்கு, 10 முதல் 15 சென்ட் இடம் போதும். முக்கால் ஏக்கர் வழங்குகிறோம்; போதாதா. சடலத்தை புதைக்க இடம் கொடுக்காவிட்டால், அதற்கு மாநகராட்சியே பொறுப்பு. தேவையான வசதியை செய்து கொடுத்து விட்டு, மீதமுள்ள இடத்தை பயன்படுத்தப் போகிறோம்' என்றனர்.
03-Feb-2025