உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நினைவாற்றல் பெருகணுமா?

நினைவாற்றல் பெருகணுமா?

ஒரு அரசு நடுநிலைப் பள்ளியில், புதிய ஆசிரியை ஒருவர் பணிக்கு வந்தார். அந்த வகுப்பில், கடந்தாண்டு குறைவான மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்று இருந்தனர் மாணவர்கள்.வருகை பதிவேட்டை சரி பார்த்தப் பின், ''இந்த ஆண்டு, அதிக மதிப்பெண்கள் பெற்று, பள்ளிக்கு பெருமை சேர்க்க வேண்டும்; என் எண்ணத்தை நிறைவேற்றுவீர்களா...'' என்று கேட்டார் ஆசிரியை.மவுனம் காத்தனர் மாணவர்கள்.''ஏன் பேச மறுக்கிறீங்க; உங்களால் முடியாது என நினைக்கிறீர்களா...'' என்றார்.ஒரு மாணவன் எழுந்து, ''நல்ல மதிப்பெண் வாங்கத்தான் நினைக்கிறோம்; ஆனால், கேள்வித்தாளைப் பார்த்ததும், விடைகள் நினைவுக்கு வரவில்லை...'' என்றான்.மாணவர்களின் நினைவு ஆற்றலை வளர்க்க போதிய பயிற்சி தரவில்லை என புரிந்தது. அதை புகட்டும் உத்தி பற்றி சிந்தித்தபடியே, ''சரி... இன்று வகுப்பில் பாடம் சம்பந்தமான விஷயங்களை தவிர்த்து, வேறு ஏதாவது பேசலாம்; எங்கேயாவது சுற்றுலா சென்றிருக்கிறீர்களா...'' என்றார் மாலதி.'ஆமாம்...' ஒருமித்த குரலில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் மாணவர்கள்.''ஊட்டியும், குற்றாலமும் சென்று வந்தோம்...'' என்றான் மூர்த்தி.''அந்த சுற்றுலாவின் போது ஏற்பட்ட அனுபவத்தை கூற முடியுமா...''ஆரவாரத்துடன் போட்டி போட்டு கூற முயன்றனர் மாணவர்கள்.''சபாஷ்... இப்படி தான் பதில் தரணும்; தப்போ, சரியோ தயங்கக்கூடாது...''ஆர்வத்தை கூட்டும் வகையில் உற்சாகப்படுத்தினார் ஆசிரியை.சுற்றுலாவில் ரசித்து மகிழ்ந்த விபரங்களை ஒன்றுவிடாமல் கூறினர் மாணவர்கள்.''அழகாகவும், அருமையாகவும் எடுத்து உரைத்தீர்கள்; சுற்றுலா நடந்து நீண்ட நாட்களுக்கு பின்னும் அந்த அனுபவத்தை எப்படி நினைவில் வைத்து கொள்ள முடிந்தது...''''சுற்றுலா முடிந்து வந்த பின், அதைப்பற்றி பேசி வந்தோம்; மகிழ்ச்சியை நண்பர்களிடம் பகிர்ந்தோம்; அதனால் மனதில் ஆழமாக தங்கியது...'' என்றான் மூர்த்தி.''இப்போ புரிகிறதா... ஒரு விஷயத்தை, திரும்ப திரும்ப பேசி இருக்கிறோம்; அதையே, நினைத்து இருக்கிறோம்; வகுப்பறையில் நடத்தும் பாடங்களும், சுற்றுலா போன்றது தான்... பாடம் படிப்பதிலும் இதுபோல் ஆர்வம் கொண்டு நினைவாற்றலை வளர்த்து கொள்ள வேண்டும்; தேர்வில் சிறப்பான மதிப்பெண் பெற, இது தான் எளிய வழி...'' என்றார் ஆசிரியை.'அப்படியே செய்வோம்...'ஒருமித்து உற்சாகமாக குரல் எழுப்பினர் மாணவர்கள்.நம்பிக்கையுடன் அடுத்த பாடத்தை நடத்த தயாரானார் ஆசிரியை.குழந்தைகளே... கல்விக்கு, நினைவாற்றல் திறன் மிக முக்கியமானது. அதை வளர்க்க உரிய பயிற்சி எடுக்க வேண்டும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை