கோவை: உக்கடம் - ஆத்துப்பாலம் வரை கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தில், 3.8 கி.மீ., துாரத்தை, மூன்றரை நிமிடத்தில் கடக்கலாம்.உக்கடம் - ஆத்துப்பாலம் வரை ரூ.481.95 கோடியில் மேம்பாலம் மாநில நெடுஞ்சாலைத்துறையால் கட்டப்பட்டுள்ளது. நாளை (ஆக., 9) கோவை வரும் முதல்வர் ஸ்டாலின், மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கிறார். இன்னும் சில இடங்களில் மழை நீர் வடிகால் கட்டும் பணி விடுபட்டுள்ளது. மேம்பாலத்தில் இருந்து வடியும் மழைநீரை சேகரிக்க கட்டமைப்பு மூன்று இடங்களில் உடைந்திருந்தன. அவற்றை சீரமைக்கும் பணி துரிதகதியில் நடந்து வருகிறது. மாநில நெடுஞ்சாலைத்துறை (கட்டுமானம், பராமரிப்பு) தலைமை பொறியாளர் சத்தியப்பிரகாஷ் நேற்று நேரில் ஆய்வு செய்தார். கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ், கோட்ட பொறியாளர் ஞானமூர்த்தி உள்ளிட்டோர் விளக்கினர். அப்போது, சாலை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யும் வகையில், டைமண்ட் ரோடு மார்க்கிங், ஒளிரும் ஸ்டிக்கர், 30 கி.மீ., வேகம் போர்டு மேலும் இரு இடங்களில் அமைக்க, தலைமை பொறியாளர் அறிவுறுத்தினார்.வழக்கமாக, ஆத்துப்பாலத்தில் இருந்து உக்கடத்துக்கு, போக்குவரத்து நெருக்கடியில் வாகனங்கள் ஊர்ந்து ஊர்ந்து வர வேண்டிய சூழல் இருந்தது; சில தருணங்களில், 30 நிமிடங்கள் ஆகும். தற்போது கட்டியுள்ள மேம்பாலத்தில் பயணித்தால், 3.8 கி.மீ., துாரத்தை மூன்றரை நிமிடத்தில் கடக்கலாம்.
இறங்குதளம் தயாராகி விடும்!
மேம்பாலம் பயன்பாட்டுக்கு வந்தபின், ஆத்துப்பாலம் சந்திப்பை மேம்படுத்த நெடுஞ்சாலைத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். பொள்ளாச்சி ரோடு மற்றும் பாலக்காடு ரோட்டில் இருந்து ஆத்துப்பாலம் சந்திப்பு வழியாக மேம்பாலத்தை பயன்படுத்துவோர் சுங்கம் செல்வதற்கு வசதியாக, வாலாங்குளம் ரோட்டில் இறங்கு தளம் அமைக்கும் பணி, தற்போது நடந்து வருகிறது. இப்பணியை, இம்மாத இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செப்., முதல் இவ்வழித்தடமும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.