கோவை : கோவை கீரணத்தம் ஷீரடி அவென்யூவில், தினமலர் நாளிதழ் நடத்தும், 'கலையும் கைவண்ணமும்' ஓவிய பயிற்சி நேற்று நடந்தது.எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனங்கள், பெவிக்ரில் இணைந்து நடத்தும், இந்த இரு நாள் பயிற்சி வகுப்பில், குழந்தைகளும் பெண்களும் உற்சாகத்துடனும் பங்கேற்றனர்.பெவிகிரில் நிறுவனத்தை சேர்ந்த சுமிதா, ஆர்த்தி ஆகியோர் இவர்களுக்கு ஓவிய பயிற்சி, வெட்டி ஒட்டுதல், பசைகளை பயன்படுத்தும் முறை, வண்ணங்களை தேர்வு செய்தல், வண்ணங்களை பூசும் பயிற்சி போன்றவற்றை கற்றுக் கொடுத்தனர். கோடை விடுமுறையில் குழந்தைகள் புதிய பயிற்சியை கற்று, மனம் மகிழ்ந்தனர்.ஷீரடி அவென்யூ குடியிருப்போர் நல சங்கத்தின் பொருளாளர் அம்ரு பின்னாஸ், துணைப் பொருளாளர் பாஸ்கர், முன்னாள் தலைவர் ரங்கநாதன், துணைத் தலைவர் யுவராஜ், துணைச் செயலாளர் சாந்தகுமார் உள்ளிட்டோர், நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.* ஜி.வி., ரெசிடென்சியில் உள்ள ஆர்.ஆர். அபார்ட்மென்ட் மற்றும் தண்ணீர்பந்தல் சாலையில் உள்ள கவுதம் ராயல் பால்ம் அபார்ட்மென்டில் நடந்த நிகழ்ச்சிகளில், கேரள முரல் பெயின்டிங், ஆப்பிரிக்க ஓவியங்கள், அலங்கார ஆபரண தயாரிப்பு, ஆர்ட் அண்ட் கிராப்ட் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.குழந்தைகளும், பெண்களும் ஜாலியாக பொழுதைக் கழித்தனர். பெவிகிரில் நிறுவனத்தின் முன்னணி ஓவிய வல்லுநர்கள் மற்றும் சிறந்த ஆபரண தயாரிப்பாளர்கள் பயிற்சி அளித்தனர். பயிற்சிக்கான பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், ஆர்.ஆர். தர்ஷன் பிளாட் ஓனர்ஸ் அசோசியேஷன் தலைவர் சித்ரா குமார வேல், பொருளாளர் ராதாகிருஷ்ணன், இணை செயலாளர் பார்த்திபன், நிர்வாக உறுப்பினர் சத்யாதேவி கணேசமூர்த்தி, கவுதம் ராயல் பால்ம் அபார்ட்மென்ட் இணை செயலாளர் ராதிகா சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.