உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோஷ்டியே எங்கள் சொத்து; கோவை தி.மு.க.,வில் உள்குத்து! உதறல், குமுறலில் உடன்பிறப்புகள்

கோஷ்டியே எங்கள் சொத்து; கோவை தி.மு.க.,வில் உள்குத்து! உதறல், குமுறலில் உடன்பிறப்புகள்

கோவைக்கு யாரைப் பொறுப்பாளராகப் போட்டாலும், அங்குள்ள தி.மு.க.,வில் கோஷ்டிப் பூசல்களை சரி செய்யவே முடியாது என்பது, எழுதப்படாத விதியாகிவிட்டது.அங்கு பொறுப்பாளராகப் போகும் அனைவருமே, 'நொந்து நுாடுல்ஸ்' ஆகித்தான் திரும்புகிறார்கள். கோவை தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும், டி.ஆர்.பி. ராஜாவும் இதை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.கோஷ்டிப்பூசல் ஒரு புறமிருக்க, அங்குள்ள தி.மு.க.,வினரிடம் இருக்கின்ற ஜாதிப்பற்றைப் பார்த்து, அவர் மிகவும் அதிர்ந்து போயிருப்பதாகத் தகவல். ஏற்கனவே கவுண்டர், நாயுடு ஒக்கலிக கவுடர் ஆகிய, கோவையின் முக்கியமான மூன்று சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பிரதிநிதித்துவம் தரும் வகையில், மாவட்டச் செயலாளர்களை தி.மு.க., தலைமை நியமித்தது.மூவரில் இருவர், தங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கே முக்கியத்துவம் தந்து வருவதாக, தொடர்ந்து புகார்கள் குவிந்து வருகின்றன.

குமுறல்

கோவையின் பெரும்பான்மை சமுதாயமாகவுள்ள கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவரான ராஜ்குமாரை, கோவை வேட்பாளராக தி.மு.க., தலைமை நிறுத்தியுள்ளது. ஆனால், மாநகர் மாவட்டச் செயலாளர் கார்த்திக், நாயுடு சமுதாயத்தைச் சேர்ந்தவர்.தொகுதியின் பெரும்பகுதி, மாநகர் மாவட்டத்தில் தான் உள்ளது. இப்போது மற்ற இரு மாவட்டச் செயலாளர்களும் வேகமாக வேலை பார்த்து வரும் நிலையில், மாநகர் மாவட்டத்தில் மட்டும் தேர்தல் பணிகள் முடங்கிக் கிடப்பதாக அறிவாலயத்துக்கு புகார்கள் பறந்துள்ளன. இதுபற்றி டி.ஆர்.பி.,ராஜாவிடமும் எக்கச்சக்கமான தகவல்களை, உடன்பிறப்புகள் அடுக்கியுள்ளனர். அ.தி.மு.க., வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், நாயுடு சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவருக்கு ஆதரவாக, மாநகர் மாவட்டத்தில் மறைமுகமாக சில வேலைகள் நடப்பதாக குற்றச்சாட்டுகளை வாசித்துள்ளனர். வார்டுகளில் தேர்தலையொட்டி கட்சி ஆபீஸ் போடவில்லை; கனிமொழி கோவை வந்தபோது, பகுதிக்கழகங்களுக்கு முறையாக தகவலே சொல்லவில்லை என்றும் பலர் குமுறியுள்ளனர்.

உதறல்

தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக, மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய தி.மு.க., தலைவர் ஸ்டாலின், 'எந்தப் பகுதியில் எவ்வளவு ஓட்டுகள் குறைகிறதோ, அந்த இடத்துக்குப் பொறுப்பானவர் பதில் சொல்லியாக வேண்டும் ' என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அதையும் பொருட்படுத்தாமல், கோவையில் உள்குத்து வேலைகள் உச்சக்கட்டமாக நடந்து கொண்டிருக்கின்றன.கோவையில் மட்டுமின்றி, பொள்ளாச்சி, நீலகிரி என, கொங்கு பெல்ட்டில் உள்ள எல்லாத் தொகுதிகளிலும் இந்த உள்ளடி வேலைகள் ஜோராக நடந்து கொண்டிருப்பதாக பரவலாக புகார்கள் குவிகின்றன. இதனால் கோடிக்கணக்கில் பணம் செலவழித்தும் பலனில்லாமல் போகுமோ என்று உதறலில் இருக்கிறார்கள் தி.மு.க., வேட்பாளர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ