கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, காரச்சேரி மாரியம்மன் மற்றும் மாகாளியம்மன் கோவிலில், நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.கிணத்துக்கடவு, காரச்சேரி பகுதியில் உள்ள மாரியம்மன், மாகாளியம்மன் கோவில், கும்பாபிஷேக விழா கடந்த 8ம் தேதி, மங்கள இசை மற்றும் விநாயகர் பூஜையுடன் துவங்கியது.9ம் தேதி, தன பூஜை, கோ பூஜை, மகா லட்சுமி ஹோமம், நவகிரஹ ஹோமம், பூர்ணாஹுதி, தீபாராதனை நடந்தது. 10ம் தேதி, காலை, அங்குரார்ப்பணம், விமான கலசங்களுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலையில், கும்ப அலங்காரம், மண்டபார்ச்சனை, வேதிகார்ச்சனை, முதல் கால யாக பூஜை நடந்தது.11ம் தேதி, காலை, இரண்டாம் கால யாக பூஜை, மஹா தீபாராதனையும், மாலையில் நவசக்தி அர்ச்சனை மற்றும் மூன்றாம் கால யாக பூஜையும், இரவு, யந்திர ஸ்தாபனம், நவரத்தின பஞ்ச லோக ஸ்தாபனம் அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடந்தது.நேற்று, அதிகாலையில், மாரியம்மனுக்கு நான்காம் கால யாக பூஜை, கலசங்கள் புறப்பாடு, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மாகாளியம்மனுக்கு நான்காம் யாக சாலை பூஜை, கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது.