உடுமலை;பேரூராட்சிகளில், நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படாததால், வேலைவாய்ப்பு இல்லாமல், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.தமிழகத்திலுள்ள, ஊராட்சிகளில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், நாள்தோறும் பல லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.ஆனால், பேரூராட்சிகளில், இத்திட்டம் செயல்பாட்டில் இல்லை. கிராமங்களின் கட்டமைப்புடன் கூடிய பேரூராட்சிகளிலும், இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, 'தமிழக அரசு, பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் தொழிலாளர்களுக்கும், வேலை வாய்ப்பு வழங்க, நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தையும், அதற்கென, 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்,' என கடந்த 2022ல் அறிவித்தது.முதற்கட்டமாக, தமிழகம் முழுவதும், திருப்பூர் மாவட்டம், கொமரலிங்கம் உட்பட, 37 பேரூராட்சிகளில் மட்டும், நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.அங்கும் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்படாமல், தொழிலாளர்கள் வேலைக்காக காத்திருக்கின்றனர். பிற பேரூராட்சிகளிலும் திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளது.பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில், விவசாய நிலங்களும், அதை சார்ந்த விவசாய தொழிலாளர்களும் அதிகளவு உள்ளனர். இத்தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலைவாய்பபு கிடைப்பதில்லை.எனவே, அரசு அறிவித்த நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும். நிதி ஒதுக்கீட்டின்படி உடனடியாக அனைத்து பேரூராட்சிகளிலும், பணிகளை துவக்கினால், பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும், பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள்.