சுற்றுலா பகுதிகளில் வசதிகளில்லை! வால்பாறை வருவோர் ஏமாற்றம்
வால்பாறை; வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் அதிகளவில் வருகின்றனர். சுற்றுலா பயணியர் தங்குவதற்கு வசதியாக, வால்பாறையில் தனியார் தங்கும் விடுதிகளும், எஸ்டேட் பகுதியில் ரிசார்ட்களும் கட்டப்பட்டுள்ளன.ஆழியாறில் இருந்து அட்டகட்டி வழியாக, வால்பாறை வரும் சுற்றுலா பயணியர் கொண்டைஊசி வளைவுகளுக்கு இடையே வரையாடுகள், குரங்குகளை கண்டு ரசிக்கின்றனர். எஸ்டேட் பகுதியில் பகல் நேரத்தில் உலா வரும் யானைகள், காட்டுமாடுகளையும் கண்டு ரசித்தவாறு வால்பாறை வருகின்றனர்.இது தவிர, நீர்வீழ்ச்சிகள், நல்லமுடி காட்சிமுனை, சோலையாறு அணை உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் அதிகம் செல்கின்றனர். மேலும், வால்பாறை நகராட்சி பூங்காவுக்கும் செல்கின்றனர், படகுசவாரியையும் செய்கின்றனர்.ஆனால், சுற்றுலா பகுதிகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், சுற்றுலா பயணியர் வருகை வெகுவாக குறைந்து வருகிறது.சுற்றுலா பயணியர் கூறியதாவது:மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலமான வால்பாறை உள்ளது. இங்கு, இயற்கையை ரசிக்க ஏராளமான இடங்கள் உள்ளன. ஆனால், பூங்கா, படகுஇல்லத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை.நீர்வீழ்ச்சிகளுக்கு ஆர்வத்துடன் குளிக்க செல்லும் சுற்றுலா பயணியர், உடை மாற்றக்கூட வசதி இல்லாததால் அவதிப்படுகின்றனர். நல்லமுடி காட்சி முனைப்பகுதி, கவர்க்கல் வியூ பாயின்ட், சின்னக்கல்லார், கீழ்நீராறு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வனத்துறை சார்பில் கட்டணம் மட்டும் வசூலிக்கின்றனர். ஆனால் அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவதில்லை.இவ்வாறு, கூறினர்.