| ADDED : ஜூலை 27, 2024 12:42 AM
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடிக் குண்டம் திருவிழாவை முன்னிட்டு லட்சார்ச்சனை நடந்தது. மேட்டுப்பாளையத்தில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக் குண்டம் விழா, 23ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜை நடை பெற்று வருகிறது. நேற்று, (26ம் தேதி) காலை, கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி தீபம் ஏற்றி, லட்சார்ச்சனையை துவக்கி வைத்தார். காலை முதல் மாலை வரை, மூலத்துறை சக்திவேல், குழந்தைவேல் ஆகியோர் லட்சார்ச்சனையை வழி நடத்தினர். இதில் பேரூராதீனம், சிரவை ஆதினத்தை சேர்ந்த, 32 அடியார்கள், நான்கு ஓதுவார்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். இன்று இரவு (27ம் தேதி) கிராம சாந்தியும், 28ல் கொடியேற்றமும் நடைபெற உள்ளது. அன்று இரவு சிம்ம வாகனத்தில், அம்மன் திருவீதி உலா நடைபெற உள்ளது. 29ம் தேதி மாலை பொங்கல் வைத்து குண்டம் திறக்கப்பட உள்ளது. 30ம் தேதி அதிகாலை, 3:00 மணிக்கு பவானி ஆற்றிலிருந்து அம்மன் அழைப்பும், அதை தொடர்ந்து காலை, 6:00 மணிக்கு குண்டம் இறங்கும் திருவிழாவும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் மேனகா, உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி ஆகியோர் செய்து வருகின்றனர்.