புது ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் பணி துவக்கம்
கோவை;உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில், புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி துவங்கியது.கார்டுகளை வழங்கிய பின், கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் முத்துச்சாமி நிருபர்களிடம் கூறியதாவது:கோவை மாவட்டத்தில் மொத்தம் 1,542 ரேஷன் கடைகள் உள்ளன. கடந்த ஆண்டில் 96 முழு நேர ரேஷன்கடைகள், 32 பகுதிநேர ரேஷன் கடைகள் புதியதாக உருவாக்கப்பட்டது. 36 பகுதி நேர ரேஷன்கடைகள் முழு நேர கடைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 54 புதிய ரேஷன்கடை கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 32 நியாய விலை கடை கட்டடப்பணி நடந்து வருகிறது. 96 புதிய கட்டடங்கள் கட்ட, நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது.184 நியாயவிலைக்கடைகள் நவீன மயமாக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 11 லட்சத்து 41 ஆயிரம் 886 ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு, 34 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர்.மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் சுமார் 90 ஆயிரம் புதிய ஸ்மார்ட் கார்டுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. மக்களுக்கு ரேஷன்கார்டில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு, உடனுக்குடன் ஒப்புதல் வழங்கபடுகிறது.கடந்த ஜூன் 2023 முதல் 15,010 வரப்பெற்ற விண்ணப்பங்களில், தகுதியுள்ள 5,357 நபர்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 5444 விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. 1,656 பேருக்கு புதிய ரேஷன்கார்டு வழங்கப்பட்டுள்ளது.மீதமுள்ளவர்களுக்கு, ரேஷன் கார்டுகள் அச்சிடும் பணி நடக்கிறது. விண்ணப்பித்த சிலருக்கு குறைபாடுகள் காரணமாக, அட்டைகள் கிடைக்காத நிலை உள்ளது.அவர்கள் மீண்டும் மனு அளித்தால், ஆய்வு செய்து ரேஷன்கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு, 90 சதவீதம் சரி செய்யப்பட்டுள்ளது.ரேஷன் கடைகளில் கை ரேகை பதிவு ஆகாத நபர்களுக்கு, கண் கருவிழி மூலம் ஸ்கேன் செய்து பொருட்கள் வழங்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன், எம்.பி.,ராஜ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.