கோவை;சிறுவாணி அணையில் நீர்க்கசிவு ஏற்படுகிறது. தினமும், 10 லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகிறது. அதை தவிர்க்க, பராமரிப்பு பணி மேற்கொள்ள, 3 கோடி ரூபாய் தமிழக அரசிடம் கேட்க, கோவை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கோவைக்கு மிக முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது சிறுவாணி அணை. சில நாட்களுக்கு முன், அணையில் இருந்த தண்ணீரை, கேரள நீர்ப்பாசனத்துறையினர் திறந்து விட்டு, வெளியேற்றினர். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, நீர்க்கசிவு ஏற்படுவது கண்டறியப்பட்டது. நாளொன்றுக்கு, 10 லட்சம் லிட்டர் தண்ணீர் கசிந்து செல்வது தெரியவந்தது.கசிவை நிறுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க, புனேவில் உள்ள தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். இதற்கு ஆய்வு கட்டணம், 17 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். இதுதவிர, தேவையான நடவடிக்கை எடுத்து, நீர்க்கசிவை தடுக்க, உத்தேசமாக, 3 கோடி ரூபாய் செலவாகுமென கேரள நீர்பாசனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு மாநகராட்சி பொது நிதியில் ரூ.17 லட்சம் செலுத்தவும், 3 கோடி ரூபாயை தமிழக அரசிடம் பெறவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கவுன்சிலர்கள் விளக்கம் கேட்டதற்கு, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் பதிலளித்ததாவது:சிறுவாணி அணை நீர் மட்டம் - 50 அடி; தற்போதுள்ள சூழலில், 45 அடிக்கு நீர் தேக்கப்படுகிறது. ஐந்தடி உயரம் என்று கூறினாலும், நீர்த்தேக்க பரப்பு அதிகம். அணையை துார்வார வேண்டிய அவசியமில்லை. மறுசீரமைப்பு பணி மேற்கொள்ள, புனேவில் உள்ள தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய குழுவினர் வர வேண்டும். ஆய்வு கட்டணம் ரூ.17 லட்சம் செலுத்தி விட்டோம். இதற்கான அரசாணையை கேரள அரசு பிறப்பித்து விட்டது. இரு நாட்களுக்குள் அத்தொகை 'டிபாசிட்' செய்யப்படும். இன்னும் ஒரு மாதத்துக்குள் புனே குழுவினர், அணையை பார்வையிட வருவர். அக்குழு அளிக்குமு் அறிக்கை அடிப்படையில், சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படும்.இன்னொரு புறம், அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்திருக்கிறோம். அரசியல் ரீதியாகவும் பேசி வருகின்றனர். கன மழை பெய்ததால், 42 அடியாக நீர் மட்டம் இருந்தபோது, தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. 13 நீர் வீழ்ச்சிகளில் இருந்து தண்ணீர் வந்ததால், திறந்து விடப்பட்டது. இன்றைய தினம் (நேற்று), 43 அடியாக நீர் மட்டம் உயர்ந்திருக்கிறது; 45 அடிக்கு தண்ணீர் தேக்கினால், கோடை காலத்தில் பற்றாக்குறை ஏற்படாது.இவ்வாறு, கமிஷனர் கூறினார்.
43.23 அடியாக உயர்ந்தது நீர் மட்டம்
சிறுவாணி அணையின் நீர் மட்டம், கடந்த ஜன., மாதம் 8 அடியாக இருந்தது. மே மாதம் முதல் பெய்து வரும் மழையால் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, நீர்ப்பிடிப்பு பகுதியில், 27 மி.மீ., அடிவாரத்தில், 23 மி.மீ., மழை பதிவானது. 43.23 அடியாக நீர் மட்டம் உயர்ந்திருந்தது. குடிநீர் தேவைக்காக, 10.32 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, கோவை மாநகராட்சி மற்றும் வழியோர கிராம மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது. அணையை பார்வையிட அழைத்துச் செல்லுமாறு, கவுன்சிலர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.