கோவை;பரபரப்பு மிகுந்த கடை வீதியில் பொது மக்களை 'கூவி' அழைத்தால் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை பாயும் என, எச்சரித்ததுடன், தரைக்கடைகளையும் போலீசார் அகற்றியுள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.கோவை டவுன்ஹால், பெரியகடை வீதி, ஒப்பணக்கார வீதி, உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளி, பேன்சி, காலணி, மளிகை என அனைத்து விதமான பொருட்களும் கிடைப்பதால் எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். குறிப்பாக, வார இறுதி நாட்களில் வாகனங்களை நிறுத்தக்கூட இடம் கிடைக்காது அலைய வேண்டியிருக்கும்.அதுவும் பண்டிகை காலங்களில் மக்கள் நடந்துசெல்லவே சிரமப்படுவதுண்டு. அந்த அளவுக்கு கூட்டம் அலைமோதும் என்பதால் வியாபாரமும் கடைகளில் ஜோராக நடக்கிறது. இதை சாதகமாக்கிக்கொண்டு கடைக்கு வெளியே நின்றுகொண்டு பொது மக்களை மறித்து வலுக்கட்டாயமாக கடைக்குள் ஊழியர்கள் அழைத்துசெல்கின்றனர்.ஆண், பெண் என்று பாராமல் கைகளை பிடித்து ஊழியர்கள் இழுத்து செல்லும் சம்பவங்கள் முகம்சுழிக்க வைக்கிறது. இது ஒருபுறம் இருக்க தொழில் போட்டியில் வாடிக்கையாளர்களை வசப்படுத்துவதில் ஊழியர்களிடையே அடிக்கடி சண்டையும் ஏற்படுகிறது.இப்படி ஏற்பட்ட தகராறில் அருகருகே பணிபுரியும் ஆண், பெண் என, இரு ஊழியர்கள் சண்டையிடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி கைது நடவடிக்கை வரை கொண்டு சென்றுள்ளது. இதையடுத்து, பெரியகடை வீதி போலீசார் அப்பகுதியில் உள்ள தரைக்கடைகளை அப்புறப்படுத்தியதுடன், கடை உரிமையாளர்களையும் எச்சரித்துள்ளனர்.இதையடுத்து, பரபரப்பு மிகுந்த பெரியகடை வீதியில் நேற்று கடை ஊழியர்களையே ரோட்டில் காணமுடியவில்லை. பொது மக்களும் எந்தவொரு இடையூறுமின்றி ஹாயாக விரும்பிய கடைகளுக்குள் சென்று பொருட்கள் வாங்கி மகிழ்ந்தனர். போலீசார் இந்நடவடிக்கை என்றும் தொடர வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு. நடவடிக்கை!
பெரிய கடைவீதி போலீசார் கூறுகையில்,'தற்போது, பெரியகடை வீதி உள்ளிட்ட இடங்களில் தரைக்கடைகளை அகற்றியுள்ளோம். குறிப்பாக, ஊழியர்கள் இனி பொது மக்களை கூவி அழைத்தால் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளோம். 'தொடர்ந்து, அடிக்கடி ரோந்து மேற்கொண்டு நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்படும்' என்றனர். எச்சரிக்கை பலகை
பெரியகடை வீதி மற்றும்சுற்றுப்பகுதியில் நடந்து செல்வோரை கடை ஊழியர்கள் இனி கூவி அழைக்கக்கூடாது. அப்படி அழைத்து பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால், 292 பி.என்.எஸ்., பிரிவின்கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என, 10 இடங்களில் முதற்கட்டமாக எச்சரிக்கை பலகைகளை நிறுவ போலீசார் முடிவு செய்துள்ளனர்.