உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எல்லோரும் ஒரு தடவை ஜோரா கைத்தட்டலாம்! 1,382 கல்வி நிலையம், 35 கிராமங்கள் புகையிலை பயன்பாட்டுக்கு பை பை

எல்லோரும் ஒரு தடவை ஜோரா கைத்தட்டலாம்! 1,382 கல்வி நிலையம், 35 கிராமங்கள் புகையிலை பயன்பாட்டுக்கு பை பை

கோவை : 1382 கல்வி நிலையங்கள், 35 கிராமங்களில் புகையிலை பயன்பாடு, முழுமையாக கைவிடப்பட்டுள்ளது. விரைவில் புகையிலை இல்லாத மாவட்டமாக, கோவையை மாற்ற மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள், நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவை மாநகர் மற்றும் மாவட்ட போலீசார், மாவட்ட சுகாதாரத்துறையினர், உணவு பாதுகாப்புத்துறையினர் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அபராதம், சீல்

அப்போது கள்ளத்தனமாக விற்பனையில் ஈடுபடும் நபர்கள், போலீசாரால் கைது செய்யப்பட்டு, போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.உணவு பாதுகாப்புதுறையினர், போதை பொருட்களை விற்பனைக்கு வைத்திருக்கும் கடைகளுக்கு அபராதம் விதித்து, சீல் வைத்து வருகின்றனர்.இதைத் தவிர, கோவை மாவட்ட சுகாதார அலுவலர் அருணா தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் வாரத்தில் ஒருநாள் திடீர் ஆய்வு நடத்தி, தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பயன்பாட்டை தடுக்க, நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.முக்கியமாக, மாணவர்களுக்கு போதை பொருள் கிடைப்பதை தடுக்க அடிக்கடி பெட்டி கடைகள், மளிகை கடைகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.இவர்களுடன், சுகாதாரத்துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய அதிகாரிகளும் இணைந்து உள்ளனர். அவர்களும் பள்ளி, கல்லுாரி, கிராமங்களில் ஆய்வு செய்து போதை பொருள் பழக்கத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

மாணவர்கள் அடிமை

இதுகுறித்து, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய அதிகாரி சரண்யாதேவி கூறியதாவது:மாணவர்கள் மத்தியில் புகையிலை (குட்கா) பழக்கம் அதிகம் உள்ளது. பெட்டிக்கடை, மளிகை கடைகளில் சுலபமாக கிடைக்கிறது. அதனை தடுக்க, பள்ளியை சுற்றி, 100 மீட்டர் துாரத்தில் உள்ள கடைகளில் அடிக்கடி சோதனை மேற்கொண்டு வருகிறோம். புகையிலை பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. புகையிலையின் தீமை குறித்து, விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது. கோவை மாநகரில், 10 பள்ளிகள், 'ஹாட் ஸ்பாட்' ஆக கண்டறியப்பட்டுள்ளன.அந்த பள்ளியின் மாணவர்களுக்கு, கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் முழுமையாக, அப்பழக்கத்தில் இருந்து விடுபடும் வரை கவுன்சிலிங் வழங்கப்படும்.

கவுன்சிலிங்கும் உண்டு

மாவட்டத்தில் உள்ள, 2048 பள்ளிகள், 140க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் உள்ள மாணவர்கள், கிராமங்களில் பொதுமக்களுக்கும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அப்போது, புகையிலை பழக்கத்திற்கு ஆளானோரை கண்டுபிடித்து, கவுன்சிலிங் வழங்கப்படுகிறது.2018ம் ஆண்டு இந்த திட்டம் துவங்கப்பட்டது. 2019ம் ஆண்டு, 10 பேர் கண்டுபிடிக்கப்பட்டு கவுன்சிலிங் வழங்கப்பட்டது. இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும், புகையிலை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, கவுன்சிலிங் வழங்கப்பட்டது.கவுன்சிலிங் நல்ல பலனை தந்துள்ளது. விரைவில் புகையிலை இல்லாத மாவட்டமாக, கோவையை மாற்ற, தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

5,090 பேருக்கு கவுன்சிலிங்!

n 2020ம் ஆண்டு ஆண்கள், 16 பேரும், 2021ம் ஆண்டு 522 ஆண்களும், 59 பெண்களும், 2022ம் ஆண்டு 791 ஆண்களும், 106 பெண்களும், 2023ம் ஆண்டு 1727 ஆண்களும், 777 பெண்களும், 2024ம் ஆண்டு 1587 ஆண்களும், 732 பெண்களும் கண்டுபிடிக்கப்பட்டனர்.n அவர்களில் ஆண்கள், பெண்கள் என மொத்தம், 5090 பேருக்கு தற்போது கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது. 694 பேருக்கு வழங்கப்பட்ட, 18 மாதம் கவுன்சிலிங்கால் புகையிலையில் இருந்து முழுமையாக விடுபட்டுள்ளனர். 35 கிராமங்களும், 1382 கல்வி நிலையங்களும் புகையிலை பயன்பாடு கைவிட்ட இடமாக மாறியுள்ளன.இத்தகவலை, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய அதிகாரி சரண்யாதேவி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை