உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வீட்டு குடிநீர் குழாயில் உயிருடன் மீன் குஞ்சுகள் பொதுமக்கள் அதிர்ச்சி

வீட்டு குடிநீர் குழாயில் உயிருடன் மீன் குஞ்சுகள் பொதுமக்கள் அதிர்ச்சி

அன்னுார் : அன்னுார் அருகே வீட்டு குழாயில் வந்த குடிநீரில் உயிருடன் மீன் குஞ்சுகள் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.காரே கவுண்டன்பாளையம் ஊராட்சி, அச்சம்பாளையத்தில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த இணைப்புகளில் ஆறு நாட்களுக்கு ஒரு முறை பவானி ஆற்று நீரும், ஒரு நாள் விட்டு ஒரு நாள் போர்வெல் நீரும் சப்ளை செய்யப்படுகிறது. அச்சம் பாளையத்தில் காளியப்பன் என்பவரது வீடு மற்றும் அதை ஒட்டி உள்ள வீட்டு குழாயில் பாத்திரத்தில் நீர் பிடித்தனர். அப்போது சிறிய மீன் குஞ்சுகள் உயிருடன் வந்தன. அதிர்ச்சி அடைந்து ஊராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இளநிலை பொறியாளர்கள் அன்பரசன், ராஜப்பன் ஆகியோர் அந்த வீட்டிலும், பின்னர் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டியையும் ஆய்வு செய்தனர். கெம்பநாயக்கன்பாளையத்தில் உள்ள 2 1/4 லட்சம் லிட்டர் நிலமட்ட தொட்டியையும் ஆய்வு செய்தனர். அதிகாரிகள் கூறுகையில்,' 708 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தில் ஆற்று நீர் வழங்கப்படுகிறது. மேட்டுப்பாளையம் சாமண்ணா வாட்டர் ஹவுசிலும், இதையடுத்து பொகலூர் நீரேற்று நிலையத்திலும் குளோரிநேஷன் செய்யப்படுகிறது. நாங்கள் விநியோகிக்கும் நீரில் மீன் குஞ்சு உயிருடன் வர வாய்ப்பில்லை. போர்வெல் நீரில் வர வாய்ப்புள்ளது,' என்றனர். ஊராட்சி தலைவர் தங்கராஜ், துணைத்தலைவர் குருதாசல மூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் ஜெயபால் ஆகியோர் போர்வெல் மோட்டாரை இயக்கி அதில் வந்த நீரை ஆய்வு செய்தனர். இதையடுத்து மேல்நிலைத் தொட்டி, சுத்தப்படுத்தி பொது மக்களுக்கு நீர் வழங்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி விட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை