இடம் மாறப்போகிறது மதுக்கரை தபால்நிலையம் 82 ஆண்டு முகவரி இழப்பதால் மக்கள் அதிருப்தி
கோவை,: கடந்த 82 ஆண்டுகளுக்கும் மேலாக, கோவை மதுக்கரையில் செயல்பட்டு வரும் துணை தபால் நிலையம், வேறிடத்துக்கு மாற்றப்படுவது, இப்பகுதி மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 1938ல், போத்தனுார் தபால் நிலையத்தின் கீழ், மதுக்கரை கிளை தபால் நிலையம் செயல்பட துவங்கியது. 1942ல், இலாகா அந்தஸ்து பெற்று, துணை தபால் நிலையமாக செயல்பட துவங்கியது. அப்போது, மதுக்கரையில் செயல்பட்டு வந்த நிறுவனம், இதற்கான இடம் ஒதுக்கி, ஒரு ரூபாய் வாடகை என்ற அடிப்படையில், தபால் நிலையம் செயல்பட துவங்கியது.கடந்த 82 ஆண்டுகளாக பாரம்பரிய அடையாளத்துடன் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது, மரப்பாலத்துக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது, இப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து, ஓய்வு பெற்ற தபால் அலுவலர் ஹரிஹரன் கூறியதாவது:மதுக்கரையில், கிளை தபால் நிலையமாக செயல்பட துவங்கி, தற்போது துணை தபால் நிலையமாக உருவெடுத்துள்ளது.முந்தைய காலத்தில், பிச்சனுார், மதுக்கரை, போடிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், தக்காளி விளைச்சல் அதிகமாக இருந்த நிலையில், இங்குள்ள மார்க்கெட்களில், விற்பனை நிலவரம் குறித்து, தபால் நிலையத்தில் இருந்து தொலைபேசி, தந்தி வாயிலாக, மற்ற மாவட்டங்களில் இருக்கும் பெரு வியாபாரிகளுக்கு தகவல் தெரிவிப்பர்.மதுக்கரை பகுதியில், மலைக்கள்ளன் திரைப்படத்தின் காட்சி எடுக்கப்பட்ட போது கூட, சென்னை உட்பட பிற இடங்களுக்கு இதுகுறித்த தகவல் தெரிவிக்க வேண்டும் என்றால், இந்த தபால் நிலையத்தில் இருந்து தான் தகவல் தெரிவிப்பர்.தற்போது, குறிப்பிட்ட இடம், வேறொரு நிர்வாகத்துக்கு மாறியதால், இந்த இடத்தை காலி செய்து தருமாறு கூறியதாக தெரிகிறது. தபால் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் வாயிலாக, வாடிக்கையாளர்கள் அதிகரித்து, சேவை பெற்று வரும் நிலையில், தபால் நிலையம் இடம் மாற்றப்படுவது, அவர்களுக்கு பெரிய குறையாக இருக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.வரும் 17ம் தேதி இந்த துணை தபால் நிலையம் மாற்றப்பட உள்ளதாக தெரிகிறது.