நிதி விரைந்து ஒதுக்காததால் மேலாண்மை குழுவினர் அதிருப்தி
அன்னுார்: அன்னுார் வட்டாரத்தில், 75 துவக்க பள்ளிகள், 16 நடுநிலைப்பள்ளிகள், மூன்று உயர்நிலைப் பள்ளிகள், ஆறு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் ஆண்டு விழா நடத்துவது வழக்கம். இதில் சாதித்த மாணவ, மாணவியர் கவுரவிக்கப்படுவர். பள்ளிக்கு உதவும் நன்கொடை தாரர்கள் கவுரவிக்கப்படுவார்கள். கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதற்கு பள்ளி கல்வித்துறை சார்பில் தொகை வழங்கப்படுவது வழக்கம். ஆனால் மார்ச் பிறந்தும், நிதி வரவில்லை.இது குறித்து பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கூறுகையில், 'ஆண்டு விழா நடத்த அரசு குறைந்த அளவு நிதி தான் ஒதுக்குகிறது. செலவாகும் மீதித் தொகையை பள்ளி ஆர்வலர்கள் மற்றும் ஆசிரியர்கள் வழங்குகின்றனர். அந்த குறைந்த அளவு தொகையையும் வழங்காமல் பள்ளிக்கல்வித்துறை இழுத்தடிக்கிறது. விரைவில் வழங்க வேண்டும்,' என்றனர்.