கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில் மழைநீர் தேங்குவதும், ரோட்டில் மண் குவிந்து இருப்பதால் வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர்.கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில், எப்பொழுதும் வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் கூட்டம் அதிகளவு இருக்கும். கடந்த ஒரு வாரமாக மழை பெய்யும் நிலையில், சர்வீஸ் ரோட்டோரத்தில் உள்ள மண், மழை நீருடன் ரோட்டில் ஏகமாக படிந்துள்ளது. இதனால், வாகன ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.பொள்ளாச்சியில் இருந்து, கோவை செல்லும் ரோட்டில் கிணத்துக்கடவு, அண்ணாநகர் பகுதியில் இருந்து அரசம்பாளையம் பிரிவு வரை உள்ள சர்வீஸ் ரோட்டில், ஏராளமான பிரச்னைகள் நிலவுகின்றன.இதில், அண்ணாநகரில் இருந்து மார்க்கெட் வரை கழிவு நீர் ரோட்டில் வழிந்தோடுகிறது. மேலும், புது பஸ் ஸ்டாண்ட் முதல், செக்போஸ்ட் வரை ரோட்டோரத்தில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியும், பாதியளவு ரோட்டில் மண் படர்ந்தும் காணப்படுகிறது.செக்போஸ்ட் முதல் அரசம்பாளையம் பிரிவு வரை, சர்வீஸ் ரோடு பள்ளமாக உள்ளது. இப்பகுதியில் மழை நீர் அதிகமாக தேங்கி நிற்கிறது. மேலும், மேம்பாலத்தில் இருந்து வழியும் நீரும் முறையாக கால்வாயில் செல்லாமல், பாலத்தில் இருந்துகுழாய் வாயிலாக, சர்வீஸ் ரோட்டில் வரும் படி நெடுஞ்சாலைத்துறையினர் கட்டமைப்பு செய்துள்ளனர்.இதனால், அதிக அளவு மழை நீர் இப்பகுதியில் தேங்கி நிற்கிறது. இங்கு உள்ள கால்வாயில் குறைந்த அளவே மழை நீர் செல்வதால், ரோட்டில் தேங்கும் நீர் முழுவதும் வடிந்து செல்ல கால தாமதம் ஆகிறது.இவ்வழியில் செல்லும் வாகனங்கள், திரும்பிச்சென்று மேம்பாலத்திலும், 'ஒன்வே' திசையிலும் செல்லும் வகையில், தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் மாற்றி விடுகின்றனர். இதனால், வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர்.இதுகுறித்து வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது:மழை காலத்தில் சர்வீஸ் ரோட்டில் பயணிக்க சிரமமாக இருக்கிறது. சில நேரங்களில் விபத்தும் ஏற்படுகிறது. எனவே, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், சர்வீஸ் ரோட்டை ஆய்வு செய்து மண் ரோட்டில் தேங்காத படியும், பாலத்தில் இருந்து வரும் மழைநீர் ரோட்டில் விழுவதை தவிர்த்து நேரடியாக கால்வாயில் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், செக்போஸ்ட் பகுதியில் இருந்து பாலம் முடியும் வரை மழைநீர் தேங்காதவாறு, சர்வீஸ் ரோட்டின் உயரத்தை அதிகரிக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.