டில்லிக்கு காலை நேரத்தில் விமான சேவை: கொங்கு குளோபல் போரம் வலியுறுத்தல்
கோவை : கோவையில் இருந்து டில்லிக்கு காலை நேரத்தில் விமான சேவை துவக்கவும், பெங்களூருக்கு இயக்கப்படும் விமான சேவையை இரட்டிப்பாக்கவும் 'ஏர் இந்தியா' நிறுவனத்துக்கு, 'கொங்கு குளோபல் போரம்' கடிதம் எழுதியுள்ளது.கோவையில் இருந்து தொழில் நிமித்தமாகவும், சொந்த வேலைக்காகவும், உயர் கல்விக்காகவும் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்குச் சென்று வரும் பயணிகள் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கடந்த ஆக., மாதம் மட்டும் பல்வேறு நாடுகளுக்கு கோவையில் இருந்து, 19 ஆயிரத்து, 751 முறை பயணிகள் சென்று வந்துள்ளனர். இது, 2019ல் அதிகபட்சமாக ஒரு மாதத்தில், 20 ஆயிரத்து, 5 முறை பயணிகள் பயணித்திருக்கின்றனர். அந்த எண்ணிக்கை, தற்போது நெருங்கியிருப்பதை காட்டுகிறது.இந்தியாவுக்குள் மட்டும் பல்வேறு நகரங்களுக்கு, இரண்டு லட்சத்து, 59 ஆயிரத்து, 600 முறை பயணிகள் சென்று திரும்பியிருக்கின்றனர். அபுதாபிக்கு, நேரடி விமான சேவை துவக்கியிருப்பது பயணிகளிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.இச்சூழலில், கோவையில் இருந்து டில்லிக்கு காலை நேரத்தில் விமான சேவை துவக்கவும், பெங்களூருக்கு இயக்கப்படும் விமான சேவையை இரட்டிப்பாக்கவும், 'கொங்கு குளோபல் போரம்' ஏர் இந்தியா நிறுவனத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. சென்னை, ஹைதராபாத் மற்றும் சிங்கப்பூருக்கு விமானங்கள் இயக்க, 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' நிறுவனத்திடம் கோரப்பட்டுள்ளது.கோவையில் விமான பயணம் அதிகரித்து வருவதால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உட்பட பல இடங்களுக்கு, சர்வதேச விமானங்களை இணைக்கும் டில்லி முனையத்துக்கு, மாலைநேர விமானத்தில் இருக்கைகளின் எண்ணிக்கையை 122ல் இருந்து, 182 ஆக ஏர் இந்தியா நிறுவனம் உயர்த்தியிருக்கிறது. 'இண்டிகோ' நிறுவனம், கோவாவுக்கு தினசரி விமானங்களையும், ஹைதராபாத்தில் கூடுதலாக நான்காவது விமானத்தையும், வரும் அக்., மாதம் துவக்க இருக்கிறது.விமானப் போக்குவரத்து ஆர்வலரான ஷ்யாம் மோகன், தகவல் அறியும் உரிமை சட்டத்தில், விமானம் நிலைய பயன்பாடு தொடர்பாக பதில் பெற்றுள்ளார். அவர் கூறுகையில், ''கோவை விமான நிலையம் ஆண்டுக்கு, 9 சதவீத வளர்ச்சியை கொண்டிருக்கிறது. 'கொரோனா' தொற்று பரவல் காரணமாக, இடைப்பட்ட காலங்களில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இப்போது தொற்று பரவலுக்கு, முந்தைய நிலையை அடைந்துள்ளோம். 'பீக் ஹவர்ஸில்' டெர்மினலில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால், கூடுதல் வசதி ஏற்படுத்த வேண்டும். 'பீக் ஹவர்ஸ்' சமயத்தில் மட்டும், 600 பயணிகள் வருகின்றனர். ஆண்டுக்கு, 20 லட்சம் பயணிகள் பயன்படுத்துகின்றனர். புதிதாக கார் பார்க்கிங் வசதி ஏற்படுத்துவதற்கு, திட்டமிட்டிருப்பது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது,'' என்றார்.