உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சொத்து வரி கட்டாதவர்களின் குடிநீர் இணைப்பு கட்; நகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

சொத்து வரி கட்டாதவர்களின் குடிநீர் இணைப்பு கட்; நகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகராட்சியில், சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களது குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையில், நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.பொள்ளாச்சி நகராட்சியில், 1.26 லட்சம் பேர் வசிக்கின்றனர். சொத்து வரி, காலி மனை வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, குப்பை சேவை கட்டணம், பாதாளச்சாக்கடை கட்டணம் உள்ளிட்ட வகையில் ஆண்டுக்கு, ரூ.53.93 கோடி வருவாய் வர வேண்டியுள்ளது.100 சதவீதம் வரி வசூல் செய்ய வேண்டும் என்ற இலக்கை எட்ட, நகராட்சி அதிகாரிகள் தீவிர வரி வசூலில் ஈடுபட்டுள்ளனர்.இதில், பொள்ளாச்சி நகராட்சியில், குடியிருப்பு வரி செலுத்திக்கொண்டு வணிகம் செய்து வரும் வரி விதிப்புதாரர்களை, உடனடியாக வரியை முறைப்படுத்திக்கொள்ளுமாறு நகராட்சி நிர்வாகம் கடந்த, மூன்று மாதங்களாக வலியுறுத்தி வந்தது.இந்நிலையில், இன்று வரை வரியை முறைப்படுத்தாமல், வணிகம் செய்து வரும் நிறுவனங்களை கண்டறிந்து வரி ஏய்ப்பு செய்வதற்காகவும், தொழில் உரிமம் பெறாமல் தொழில் செய்து வருவதும் கண்டறியப்பட்டு, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் மற்றும் விதிகளை மீறிய, டி.கோட்டாம்பட்டியில் ஒரு வணிக நிறுவனத்துக்கு, பொள்ளாச்சி நகராட்சி வருவாய் அலுவலர்கள் மற்றும் சுகாதார பிரிவு அலுவலர்கள் 'சீல்' வைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து, அவர் வரி செலுத்துவதாக தெரிவித்ததையடுத்து எச்சரிக்கை விடுத்தனர்.நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'சட்ட விதிகளை மீறி செயல்படும் கடைகளை கண்டறிந்து, வரும் நாட்களில் சீலிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதுபோன்ற சட்ட நடவடிக்கைகளை தவிர்க்க, உடனடியாக நகராட்சி நிர்வாகத்தை அணுகி, நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரிகளை முறைப்படுத்திக்கொண்டு தொழில் உரிமம் பெற்று தொழில் செய்ய வேண்டும்,' என்றனர்.

மக்களுக்கு அறிவுறுத்தல்

பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 17,710 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதில், குடிநீர் கட்டணம், ஆறு கோடியே, 22 லட்சம் உள்ளது. அதில், ஒரு கோடியே, 52 லட்சம் ரூபாய் பாக்கியுள்ளது.குடிநீர் கட்டணம் செலுத்தாத மற்றும் வணிக வளாகங்கள் உடனடியாக குடிநீர் கட்டணம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.தவறும் பட்சத்தில், நகராட்சி ஊழியர்கள் குடிநீர் செலுத்தாத குடியிருப்புகள், வணிக வளாகங்களில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.மேலும், சொத்து வரி செலுத்தாத குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களும் உடனடியாக செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. தவறும் பட்சத்தில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை