உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இயற்கையே துணை; விவசாயத்தில் அசத்தல்! கைகொடுக்கும் நவீன தொழில்நுட்ப முறை

இயற்கையே துணை; விவசாயத்தில் அசத்தல்! கைகொடுக்கும் நவீன தொழில்நுட்ப முறை

கிணத்துக்கடவு;நெகமம், ஜக்கார்பாளையத்தில் தொழில் நுட்பத்தின் வாயிலாக, இயற்கை விவசாயம் செய்து அசத்துகிறார் விவசாயி சம்பத்.விவசாயத்தில் ரசாயனம், பூச்சிக்கொல்லி, களைச்கொல்லி பயன்பாடு தவிர்க்க முடியாததாகி விட்டது. இந்நிலையில், நெகமம், ஜக்கார்பாளையத்தில் விவசாயி சம்பத், குறைந்த செலவில் தொழில் நுட்பத்தின் வாயிலாக இயற்கை விவசாயம் செய்கிறார்.விவசாயி சம்பத்குமாருடனான சந்திப்பில் இருந்து...கிராமத்தில், எங்களுக்கு 10 ஏக்கர் தென்னந்தோப்பு உள்ளது. இதில், ரசாயன உரம் இல்லாமல் இயற்கை முறையில் விவசாயம் செய்ய முடிவு செய்தேன். கடந்த 12 ஆண்டுகளாக, இயற்கை விவசாயம் செய்கிறோம். இதில், பெரும்பாலும் நம்மாழ்வார் கூறிய ஆலோசனைகளை பின்பற்றுகிறோம்.

ஐந்தடுக்கு முறை

தென்னையில் ஊடுபயிர்களாக, வாழை, எருக்கன், மகாகனி, பப்பாளி, மிளகு போன்றவைகளை நடவு செய்துள்ளேன். இதனால், தென்னையில் மட்டும் இல்லாமல், ஊடுபயிரிலும் வருமானம் ஈட்ட முடியும்.இந்த முறையில் விவசாயம் செய்வதால், கோடை காலத்தில் அதிகளவு வெப்பம் மண்ணிற்கும், மரத்துக்கும் வராமல் தடுக்கிறது. குறைந்தளவு வெப்பம் மரத்திற்கு கிடைப்பதால், மரம் வளர நன்கு உதவுகிறது.

பசு விடுதி

இங்கு நாட்டு மாடுகளுக்கு (காங்கேயம்) விடுதி உள்ளது. மாடுகளை பராமரிக்க முடியாதவர்கள், இங்கு வந்து விட்டு செல்வார்கள். மீண்டும் எப்போது மாடு தேவைப்படுகிறதோ, அப்போது மீண்டும் அழைத்து செல்வார்கள்.பிற மாநிலங்களுக்கு, இறைச்சிக்கு கொண்டு செல்லப்படும் நாட்டு மாடுகள் ஆயிரத்துக்கும் மேல் காப்பாற்றப்பட்டுள்ளன.இங்கு கொண்டு வரும் மாடுகளுக்கு, பராமரிப்புக்காக சிறிய அளவிலான தொகை வசூலிக்கப்படுகிறது. தற்போது, இங்கு 45 மாடுகள் உள்ளன.

உர மேலாண்மை

தென்னை மற்றும் பிற மரங்களுக்கு இயற்கை உரமான அமிர்த கரைசல் மற்றும் ஜீவாமிர்தம் கொடுக்கப்படுகிறது. இவைகள் தயாரிக்க தொழில் நுட்பத்தை பயன்படுத்துகிறோம். இங்கு உள்ள பசு விடுதியில் இருக்கும் சாணம் மற்றும் கோமியம் ஒரு தொட்டியில் சேகரிக்கப்பட்டு, அதில், சாணத்தை தனியாக பிழிந்து சக்கை ஒரு பகுதியிலும், மீதம் உள்ள நீர் தொட்டியிலும் சேகரிக்கப்படுகிறது. தொட்டியில் சர்க்கரை, பழக்கழிவு போன்றவைகள் சேர்த்து அமிர்த கரைசல் உருவாக்கப்படுகிறது.ஜீவாமிர்தம் தயாரிக்க தனி இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இவைகள் இரண்டும் அவ்வப்போது தென்னைக்கு தண்ணீருடன் கலந்து பாய்ச்சப்படுகிறது. இவை அனைத்தும் ஒரு பட்டன் அழுத்தினால் போதும் வேலை முடிந்து விடும்.இங்கு தயாரிக்கப்படும் ஜீவாமிர்தம், அமிர்தகரைசல், மற்றும் சாண கழிவில் இருந்து தயாராகும் மண் புழு உரம் போன்றவை விற்பனை செய்யப்படுகிறது.

மதிப்பு கூட்டு பொருள்

தென்னை மரத்தில் இருந்து தேங்காய் பறிப்பது கிடையாது. மாறாக மரத்தில் இருந்து கீழே விழும் தேங்காயை கொண்டு மதிப்பு கூட்டு பொருள் தயாரிக்கிறோம். இதில், 40 வயதுடைய மரத்தில் இருந்து கிடைக்கும் காயை, 60 நாட்கள் தண்ணீரில் போட்டு வைத்து, அதன்பின் நடவு செய்து தென்னங்கன்று உற்பத்தி செய்து, ஒரு கன்று 100 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம்.மண்புழு உரம் விற்பனை, செக்கில் ஆட்டப்பட்ட தேங்காய் எண்ணெய், தேங்காய் எண்ணெய் சோப்பு, சோலார் டிரையரில் கொப்பரை மற்றும் பந்து கொப்பரை உலர வைத்தல், பயோ கேஸ், பழ வகைகள், நாட்டு கோழி முட்டை விற்பனை செய்யப்படுகிறது. இதில், இருந்து லாபம் ஈட்டுகிறோம்.நாட்டு மாட்டு பண்ணை, நாட்டு கோழி மற்றும் ஆட்டு பண்ணை, மதிப்பு கூட்டு பொருள் தயாரித்தல், இயற்கை எரிவாயு போன்றவைகளால் கூடுதல் வருமானம் கிடைக்கிறது. இங்கு பணிபுரியும் பணியாளர்கள் குடும்பத்துக்கு, 'பயோ கேஸ்' வினியோகிக்கப்படுகிறது.

இயற்கை அங்காடி

தென்னந்தோப்புக்கு உழவு மற்றும் களையெடுத்தல் போன்றவைகள் மேற்கொள்ளவதில்லை. ஆட்களும் இங்கு குறைவாகவே பணியாற்றுகின்றனர். ஒரு பட்டனை தட்டினால் அனைத்து வேலையும் முடிந்து விடும் வகையில் தொழில்நுட்ப முறைகள் பயன்படுத்தப்படுகிறது.அதனால், இங்கு குறைவான ஆட்களே பணிபுரிகின்றனர். பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க, நாட்டு கோழி மற்றும் ஆட்டு பண்ணை வருமானம் உள்ளது. தென்னை சாகுபடிக்கு தனியாக செலவே இல்லை.புதிதாக இயற்கை அங்காடி துவங்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இது நிறைவு பெற்ற பின், இயற்கை முறையில் விளைவித்த காய்கள், பழங்கள் மற்றும் பிற விவசாய தோட்டத்தில் இருந்து வரும் இயற்கை விவசாய விளைபொருட்களை இங்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம், என, பகிர்ந்து கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ