உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரூ.1 கோடியில் புதிய பேரூராட்சி அலுவலகம்; அன்னுாரில் புதிய பேரூராட்சி அலுவலகம்

ரூ.1 கோடியில் புதிய பேரூராட்சி அலுவலகம்; அன்னுாரில் புதிய பேரூராட்சி அலுவலகம்

அன்னுார் : அன்னுாரில் புதிய பேரூராட்சி அலுவலகம் கட்ட, ஒரு கோடியே 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அன்னூர் பேரூராட்சியில், 15 வார்டுகளில், 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். 6,000 வீட்டு குடிநீர் இணைப்புகளும், 250க்கும் மேற்பட்ட பொது குடிநீர் இணைப்புகளும் உள்ளன. வணிக வளாகம், வார சந்தை, சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, லைசன்ஸ் கட்டணம் என, ஆண்டுக்கு மூன்று கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் உள்ளது. அன்னுாரில் குமாரபாளையம் செல்லும் சாலையில், தனியார் 'லே அவுட்' டில் தானமாக வழங்கப்பட்ட இடம் மற்றும் கட்டடத்தில், நான்கு ஆண்டுகளுக்கு முன் பேரூராட்சி அலுவலகம் அன்னூர் நகரில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டது. அன்னுார் நகரிலிருந்து, 1.50 கி.மீ தொலைவில் உள்ளதால், அங்கீகாரம் பெறுதல், வரி செலுத்துதல், புதிய இணைப்பு பெறுதல் உள்ளிட்டவைகளுக்காக அங்கு செல்வதற்கு அன்னூர் மக்கள் சிரமப்பட்டு வந்தனர். 'அன்னூர் நகரில் பேரூராட்சி அலுவலகம் கட்ட வேண்டும்' என, மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து அன்னுார், மேட்டுப்பாளையம் சாலையில், பழைய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் புதிய பேரூராட்சி அலுவலகம் கட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேருவை பேரூராட்சி சார்பில் நேரில் சந்தித்து நிதி ஒதுக்க வலியுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழக அரசு அன்னுார் பேரூராட்சிக்கு புதிய அலுவலகம் கட்ட, ஒரு கோடியே ஐந்து லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. டெண்டர் அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி அலுவலகம் கட்ட தேர்வு செய்யப்பட்ட இடத்தில் மண் பரிசோதனை செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.'புதிய அலுவலகம் கட்டும் பணி விரைவில் துவங்கும். இதனால், பொதுமக்கள் அதிக தொலைவு செல்ல வேண்டிய சிரமம் இனி இருக்காது' என பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்